செம்பவாங் கடைத்தொகுதியில் தீ; பாலர் பள்ளி மாணவர்கள் 150 பேர் வெளியேற்றம்

செம்பவாங் கடைத்தொகுதியில் தீ; பாலர் பள்ளி மாணவர்கள் 150 பேர் வெளியேற்றம்

1 mins read
1d8acda0-1972-4fad-8ca8-ad120221bffc
செம்பவாங் கடைத்தொகுதியில் உள்ள விங்ஸ்டாப் கடையில் தீ மூண்டதாகத் தெரிகிறது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

செம்பவாங் கடைத்தொகுதியில் திங்கட்கிழமை (மார்ச் 23) காலை தீ மூண்டதை அடுத்து அந்த வளாகத்துக்குள் இருந்த 150க்கும் அதிகமான பாலர் பள்ளிப் பிள்ளைகள் வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

604 செம்பவாங் சாலையில் அமைந்துள்ள செம்பவாங் கடைத்தொகுதியில் தீ மூண்டது குறித்து காலை 9.40 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

கடைத்தொகுதியின் இரண்டாம் தளத்தில் இருந்த உணவுகளைப் பொரிக்கும் கருவியில் தீ மூண்டதாகத் தெரிகிறது. பொரித்த கோழிகளை விற்கும் விங்ஸ்டாப் (Wingstop) என்ற விரைவு உணவகத்தில் தீ மூண்டதாக லியன்ஹ சாவ்பாவ் என்ற சீன நாளேடு சொன்னது.

சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே கடைத்தொகுதியில் இருந்த நீர்த் தெளிப்பான்கள் மூலம் தீ அணைக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

கடைத்தொகுதியில் தீ மூண்டது குறித்து தகவல் வந்தவுடன் இரண்டாம் தளத்தில் செயல்படும் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் உள்ள ஊழியர்கள் துரிதமாகப் பிள்ளைகள் அனைவரையும் வெளியேற்றியதாகப் பாலர் பள்ளிப் பேச்சாளர் கூறினார்.

பிள்ளைகளும் கல்வியாளர்களும் பாதுகாப்பாக காலை 11.30 மணியளவில் வகுப்பறைகளுக்குத் திரும்பினர் என்று அவர் குறிப்பிட்டார்.

பெற்றோருக்கும் சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டதை அவர் சுட்டினார்.

தீ மூண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

செம்பவாங் கடைத்தொகுதியில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் வளாகத்திலிருந்து 150க்கும் அதிகமான பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
செம்பவாங் கடைத்தொகுதியில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் வளாகத்திலிருந்து 150க்கும் அதிகமான பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். - படம்: சாவ்பாவ்
குறிப்புச் சொற்கள்
தீகடைத்தொகுதிசெம்பவாங்