செங்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றம்

செங்காங் கூட்டுரிமை வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றம்

படம்: டிக்டாக் காணொளி/CuriouslyCarla

09 Oct 2026 - 9:14 pm

1 mins read

செங்காங்கில் உள்ள கூட்டுரிமை வீடு ஒன்றில் தீ மூண்டதை அடுத்து வியாழக்கிழமை (அக்டோபர் 8) இரவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 பேர் வெளியேற்றப்பட்டனர்.

செங்காங் ஸ்குவேர் புளோக் 66ல் அமைந்துள்ள லா ஃபியஸ்டா கூட்டுரிமை வீடுகளின் மூன்றாம் தள வீட்டில் வியாழக்கிழமை இரவு 8.10 மணியளவில் தீ மூண்டது குறித்துத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஏஷியாஒன் ஊடகத்திடம் தெரிவித்தது.

குடிமைத் தற்காப்புப் படையினர், நீர்க் குழாயைப் பயன்படுத்தி வீட்டின் வரவேற்பறையில் எரிந்த தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மின்சாரக் கோளாறு காரணமாகவே இந்தத் தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ எச்சரிக்கை மணி மூன்று முறை ஒலித்தபோது அதனைப் போலி எச்சரிக்கை என நினைத்ததாகவும், வீட்டின் புகையைக் கண்ட பிறகே விபத்தை உணர்ந்ததாகவும் அங்கே வசிக்கும் டிக்டாக் பயனர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மின்சாரத் தீவிபத்துகளைத் தவிர்க்கப் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிமைத் தற்காப்புப் படை அறிவுறுத்தியுள்ளது.

மின் இணைப்புகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சாதனங்களைப் பயன்படுத்தாதபோது அவற்றை அணைத்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சேதமடைந்த மின்கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், சாதனங்களை நீண்ட நேரம் இரவில் மின்னேற்றம் செய்யக் கூடாது என்றும் அது நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்