சிராங்கூன் சாலை கடைவீட்டில் தீ; 40 பேர் வெளியேற்றம்

சிராங்கூன் சாலை கடைவீட்டில் தீ; 40 பேர் வெளியேற்றம்

1 mins read
afd9f12f-c78a-4021-9c25-fa3f9a8d278d
562சி சிராங்கூன் சாலை கடைவீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் குடிமைத் தற்காப்புப் படையினர் ஈடுபட்டனர். - படம் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
Google News Preferred Icon

சிராங்கூன் சாலையிலுள்ள கடைவீடு ஒன்றில் புதன்கிழமை (ஜூலை 22) காலை தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்டர்டீ சாலைக்கு அருகே தரைத்தளத்தில் லட்சுமி விலாஸ் உணவகம் அமைந்துள்ள நான்கு மாடிக் கடை வீட்டிலிருந்து புகை வெளிவருவதைத் தமிழ் முரசு வாசகர் ஒருவர் அனுப்பிய படங்கள் காட்டினர்.

சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ உதவி வாகனம், காவல்துறை வாகனம் ஆகியவை இருப்பதைப் படங்கள் காட்டின.

சிராங்கூன் ரோடு 562சி கடைவீட்டில் காலை 9.30 மணியளவில் தீ விபத்து நேர்ந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தகவல் வெளியிட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அந்தக் கடைவீட்டின் நான்காவது மாடி தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததைக் கண்டனர்.

தீயணைப்பில் மும்முரமாக ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
தீயணைப்பில் மும்முரமாக ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள். - படம்: சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை

தீயை அணைக்க வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் குழாய்களைப் பயன்படுத்தினர். 

கடைவீட்டுக்கு முன்னால் தீயணைப்பு வாகனம்.
கடைவீட்டுக்கு முன்னால் தீயணைப்பு வாகனம். - படம்: தமிழ் முரசு வாசகர்

அத்துடன், அருகிலுள்ள கடைகளுக்குத் தீ பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய, ஏணியை எழுப்பக்கூடிய வாகனத்தின் உதவியுடன் உயரத்திலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதியில் தீ மீண்டும் மூளாமல் இருப்பதை உறுதிசெய்ய, தீக்கிரையான பகுதிகள்மீது தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.

அருகிலுள்ள கடைகளிலிருந்து கிட்டத்தட்ட 40 பேர் காவல்துறையினராலும் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளாலும் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாக தகவல் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்