தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோ வீவக மையத்தில் தீ; அனைவரும் உடனடியாக வெளியேற்றம்

2 mins read
59b157e3-31be-42ad-abfc-54d930f5ad42
மின்தூக்கிகள் நிறுத்தப்பட்டதால் படிக்கட்டுகள் மூலம் ஊழியர்கள் வெளியேறினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தோ பாயோவில் உள்ள வீவக மையத்தில் புதன்கிழமை (அக்டோபர் 2) பிற்பகலில் திடீரெனத் தீ மூண்டதால் அங்கிருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மையத்தின் கீழ்த்தள கார்நிறுத்தும் இடத்தின் மூன்றாவது மாடியில் தீப்பிடித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

சம்பவ இடத்துக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சென்று பார்த்தபோது, மூன்று தீயணைப்பு வாகனங்களும் ஒரு மீட்பு வாகனமும் இரு ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு காணப்பட்டன. குறைந்தபட்சம் 10 தீயணைப்பாளர்கள் அங்கு இருந்தனர்.

கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேறுமாறு நண்பகல் 12 மணியளவில் அறிவிக்கப்பட்டதாக திருவாட்டி நஃபிஸா, 43, என்பவர் கூறினார்.

அந்தக் கட்டடத்தின் நான்காவது மாடியில் வேலை செய்யும் அந்தப் பெண், “என்ன நடந்தது என்று தெரியாமல் வெளியே வந்துவிட்டோம். மீண்டும் எங்களது அலுவலகத்துக்குச் செல்வதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்,” என்றார்.

திருவாட்டி ஜெ என்று தம்மை அறிமுகம் செய்துகொண்ட மற்றொரு பெண், பிற்பகல் 12.45 மணிவாக்கில் தீ எச்சரிக்கை அபாய ஒலியைக் கேட்டதாகக் கூறினார்.

கட்டடத்தின் கீழ்த்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார் வீவக மைய ஊழியரான அவர்.

“எல்லா மின்தூக்கிகளும் நிறுத்தப்பட்டதால் நானும் என்னுடன் வேலை செய்தவர்களும் 28வது மாடியிலிருந்து படிக்கட்டு வாயிலாக வெளியேறினோம். இருப்பினும், யாரும் பதற்றமடையவில்லை,” என்றார் அந்த 49 வயதுப் பெண்மணி.

அங்கு வழக்கநிலை திரும்பிவிட்டதாக பிற்பகல் 2.05 மணியளவில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கார் நிறுத்துமிடத்தின் மூன்றாம் தளத்தில் பொருள்களை ஏற்றி இறக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

கூடுதல் விவரங்களுக்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை மற்றும் வீவகவைத் தொடர்புகொண்டு உள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தீதோ பாயோவிபத்து