சிங்கப்பூர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜூஃப்ரி அலுய், மலேசியப் பயணத்தை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) அதிகாலையில் வீட்டிற்குத் திரும்பிய பிறகு, அவரின் ஏழு மாதக் குழந்தையைத் தூங்க வைத்துக்கொண்டிருந்தார். அப்போது கழிப்பறையில் இருந்து படபடக்கும் சத்தமும் புகை நாற்றமும் வருவதாக அவரின் மனைவி எச்சரித்தார்.
சிறிது நேரத்தில், கழிப்பறைத் தொட்டிக்கு மேலே இருந்த ‘எல்இடி’ (LED) விளக்குப் பெட்டியில் சிறிய தீப்பொறி தோன்றி, பெரிய தீப்பிழம்பாய் வேகமாக மாறியதை அவர் கண்டார்.
அக்டோபர் 5ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ்ட் டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய அவர், குடும்பத்தினர் விரைவாக வெளியேற முடிந்ததற்கும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கும் நன்றி தெரிவித்தார்.
எட்ஜ்டேல் பிளெயின்சின் புளோக் 684ஏயில் உள்ள தீயைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 4.40க்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
ஐந்தாம் தளத்தில் உள்ள வீட்டின் கழிப்பறையில் மூண்ட நெருப்பைத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அது கட்டுக்குள் கொண்டுவந்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
“கழிப்பறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறே இந்தத் தீ விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று அது குறிப்பிட்டது.
ஜுஃப்ரி, சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டகிராமில் பதிவிட்டார். சமூக ஊடகங்களில் புதிய பதிவுகளை உருவாக்குபவர் அவர்.
காணொளியில் அவரது வீட்டின் ஒரு பகுதியை ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் சூழ்ந்திருப்பதைக் காண முடிகிறது. மற்றொரு காணொளியில் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர், தண்ணீர்க் குழாயுடன் அவரது வீட்டிற்குள் நுழைவதைப் பார்க்கமுடிகிறது.
தாமும் மனைவியும் நான்கு குழந்தைகளுடன் ஜோகூர் பாருவிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்தில் தீச்சம்பவம் நிகழ்ந்ததாக ஜூஃப்ரி தெரிவித்தார்.
பொதுக் கழிப்பறையில் மனைவி குளித்துக் கொண்டிருந்தபோது, படபடக்கும் சத்தத்தைக் கேட்டுப் புகை நாற்றத்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.
அவர் எச்சரித்ததைத் தொடர்ந்து வெந்நீர்ப் பொறியை உடனே அணைத்ததாக ஜுஃப்ரி சொன்னார்.
தனியாக உள்ளே தீயைக் கண்காணித்த அவர், உதவிக்காக விரைவாக 995 அவசரத் தொலைபேசி எண்ணை அழைத்ததாகக் குறிப்பிட்டார்.
பல தீத்தடுப்பு உதவிக்குறிப்புகளைப் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று குடிமைத் தற்காப்புப் படை ஆலோசனை கூறியது.
