சீனப் புத்தாண்டின் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் ரிவர் ஹொங்பாவ் இவ்வாண்டு வாண வேடிக்கைகளுடனும் சிறப்பு விளக்கொளி வெளிச்சத்திலும் கொண்டாடப்பட உள்ளது.
சிங்கப்பூரின் 60 ஆண்டுக் (SG60) கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் குறிக்கும் 60 வித வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட உள்ளன.
சீனப் புத்தாண்டின் தொடர்பில் ஒவ்வோர் ஆண்டும் ரிவர் ஹொங்பாவ் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த 1987ஆம் ஆண்டு முதல் அந்தக் கொண்டாட்டம் இடம்பெற்று வருகிறது.
இவ்வாண்டு சீனர்களின் பாம்பு ஆண்டு ஆகும். ஜனவரி 29ஆம் தேதி பாம்புப் புத்தாண்டு பிறக்கிறது.
அதன் தொடர்பில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 5 வரை கரையோரப் பூந்தோட்டங்களில் ரிவர் ஹொங்பாவ் கொண்டாட்டம் நடைபெறும்.
சீனப் புத்தாண்டையொட்டி நீண்ட, ஆகப்பெரிய இந்தக் கொண்டாட்டம் 2024ஆம் ஆண்டு 1.01 மில்லியன் வருகையாளர்களை ஈர்த்தது.
ரிவர் ஹொங்பாவ் கொண்டாட்டம் சீனர்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றுவதில் கவனம் செலுத்தும் அதேநேரம் சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொருவரிடமும் விழாக்கால மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ரிவர் அங்பாவ் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் தாமஸ் சுவா தெரிவித்து உள்ளார்.
“2025 ரிவர் ஹொங்பாவ் கொண்டாட்டம் சிங்கப்பூரின் 60வது ஆண்டு கொண்டாட்டமும் ஆகும். எனவே, இரண்டையும் ஒருங்கிணைத்து சிங்கப்பூருக்குப் பெருமை சேர்ப்போம்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரின் தொடர் முன்னேற்றத்துக்கும் வளப்பத்துக்கும் ஒன்றுகலந்த வாழ்த்தையும் தெரிவிப்போம்,” என்றார் சிங்கப்பூர் சீன குலவழிச் சங்கக் கூட்டமைப்பின் தலைவருமான திரு சுவா.
“கரையோரப் பூந்தோட்டத்தின் ஆகப்பெரிய வெளிப்புற பூங்காவெளியான ‘த மெடோ’வில் (The Meadow) ஜனவரி 27ஆம் தேதி கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்வில் 60 வித வாணவேடிக்கை இடம்பெறும்.
“இரண்டாவது, மூன்றாவது நாள்களான ஜனவரி 28, 29 தேதிகளில் ஒவ்வொரு இரவிலும் 30 வித வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.
“மேலும் SG60 கருப்பொருளில் அமைந்த பெரிய விளக்கொளி அலங்காரமும் இடம்பெறும். அதனைச் சுற்றி அதைவிட சிறிய 27 விளக்கொளிக் கூடாரங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கும்,” என்றும் திரு சுவா தெரிவித்தார்.

