சிலேத்தார் விமான நிலையத்திற்கும் சுபாங்கில் உள்ள சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா விமான நிலையத்திற்கும் இடையிலான தமது விமானச் சேவைகளை அக்டோபர் 22ஆம் தேதி முதல் முழுமையாக மீண்டும் தொடங்குவதாக ஃபயர்ஃபிளை (Firefly) நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தோனீசியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகச் சிங்கப்பூரில் கடும் புகைமூட்டம் நிலவியது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 10 முதல் 12 வரை ஃபயர்ஃபிளை தமது விமானச் சேவைகளை ரத்து செய்தது.
பின்னர் இந்த நடவடிக்கை அக்டோபர் 19 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், புகைமூட்ட நிலைமை மேம்பட்டுள்ளதை அடுத்து, அக்டோபர் 21ஆம் தேதி வரை குறைக்கப்பட்ட கால அட்டவணைப்படி வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் 22 முதல் முழுமையான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் தமது ஃபேஸ்புக் பதிவில் ஃபயர்ஃபிளை நிறுவனம் தெரிவித்தது.
புகைமூட்ட அதிகரிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட விமானச் சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குக் கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையே மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதில் விருப்பமில்லாதவர்கள் 30 வேலை நாள்களுக்குள் முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
