தேசிய தின விழாவை முன்னிட்டு பிடோக், தோ பாயோ, உட்லண்ட்ஸ், தெம்பனிஸ், ஜூரோங் வெஸ்ட் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஞாயிற்றுக்கிழமை மாலையில் பல்வேறு விளையாட்டுகள், வாணவேடிக்கைகள் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
இதன்மூலம் தேசிய தின விழாவை தங்கள் வீடுகளுக்கு அருகே கொண்டு வருவதாக அவர்கள் உணர்ந்தனர்.
நாட்டின் 58வது பிறந்த நாளை முன்னிட்டுக் குடியிருப்பு வட்டாரங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஆக்டிவ் எஸ்ஜி தோ பாயோ விளையாட்டுத் திடலில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்றார்.
அவருடன் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியோவ் ஹுவாங், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, அடித்தளத் தலைவர்கள், குடியிருப்புவாசிகள் இணைந்து 10 நிமிட வாணவேடிக்கையைக் கண்டுகளித்தனர்.