புத்தாண்டை வரவேற்க வாணவேடிக்கை, நேரடி நிகழ்ச்சிகள்

புத்தாண்டை வரவேற்க வாணவேடிக்கை, நேரடி நிகழ்ச்சிகள்

கோப்புப் படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 4:43 pm

2 mins read

ஆங்கிலப் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்க விரும்புவோருக்காகத் தீவு முழுவதும் குடும்பங்களுக்கு ஏற்ற நடவடிக்கைகள், நேரடி நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் கூடிய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

டிசம்பர் 31ஆம் தேதி நடைபெறும் இக்கொண்டாட்டங்கள், ‘ஒன் கவுண்டவுன் 2027’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆறு குடியிருப்புப் பேட்டைகளிலும் தி காலாங்கிலும் இடம்பெறும் எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வியாழக்கிழமையன்று (நவம்பர் 19) அறிவித்தது. மரினா பே, செந்தோசா, கிளார்க் கீ, வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்கள், தங்குமிடங்களிலும் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

அன்று பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நீட்டிக்கப்படும். விவரங்களைப் போக்குவரத்து நிறுவனங்கள் டிசம்பரில் அறிவிக்கும்.

பூன் லே, சுவா சூ காங், நீ சூன், பொங்கோல், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ் ஆகிய குடியிருப்புப் பேட்டைகளில் மக்கள் கழகம் ஏற்பாடு செய்யும் கொண்டாட்டங்களின் விவரங்கள் டிசம்பரில் வெளியிடப்படும்.

முன்னர் சிங்கப்பூர் விளையாட்டு நடுவம் என அழைக்கப்பட்ட தி காலாங்கில், இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை நான்கு பகுதிகளாக 35 நிமிட வாணவேடிக்கையும் ஒளி, ஒலிக் காட்சியும் இடம்பெறும்.

மரினா பே பகுதியில் பேஃபிரண்ட் நிகழ்ச்சித் திடலில் ஆசியப் பாப் கலாசார விழா, ஃபுல்லர்டன் ஹோட்டல் முகப்பு ஒளிக்காட்சி, எஸ்பிளனேடில் நேரடி இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

செந்தோசாவின் சிலோசோ, பலவான் கடற்கரைகளில் ஒரே நேரத்தில் இரட்டை வாணவேடிக்கையும் நிகழும். கிளார்க் கீயில் நேரடி இசை, டிஜே நிகழ்ச்சிகள், எல்இடி பலூன் வெடிப்புடன் இலவச அனுமதியில் புத்தாண்டு வரவேற்பு நடைபெறும்.

மேலும், காக்கி புக்கிட், கிராஞ்சி, பெஞ்சுரு, தெருசான், துவாஸ் சவுத், சூன் லீ, உட்லண்ட்ஸ் ஆகிய ஏழு வெளிநாட்டு ஊழியர் பொழுதுபோக்கு நிலையங்களிலும் 15 தங்குமிடங்களிலும் நேரடி நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுகள், அதிர்ஷ்டக் குலுக்கலுடன் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்