சிங்கப்பூரின் புதிய பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியான அதிகாரத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றது சிங்கப்பூருக்குப் பெரிய அனுகூலம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சிக்குக் கிடைத்த வலுவான ஆதரவு அனைத்துலக அளவில் நாட்டை முன்னிறுத்துவதற்குச் சாதகமானது என்று அவர் குறிப்பிட்டார்.
“யாரும் இங்குத் தனியாகச் செயல்பட முடியாது. இது மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணி,” என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.
உலகம் புதிய பரிமாணத்துக்குள் செல்கிறது என்ற அவர், அது அதிகபட்ச அபாயம் கொண்ட காலகட்டம் என்றார்.
புயல் வீசும் நேரங்களில் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு தலைவர் தேவை என்றும் அடுத்த சில ஆண்டுகள் சுமுகமாக இருக்கப்போவதில்லை என்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். புக்கிட் பாஞ்சாங் பிளாசாவில் மக்களை டாக்டர் பாலகிருஷ்ணனும் அவரது அணியும் சந்தித்துப் பேசினர்.
ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிட்ட அவரது அணி 79.29% வாக்குகள் பெற்று ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளியது.

