சிங்கப்பூரில் தலைமை அலுவலகம் கொண்டுள்ள நிறுவனங்கள் அதன் உற்பத்தி தொழிற்சாலைகளை ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்துள்ளார்.
அந்நிறுவனங்கள் சிங்கப்பூரில் அவற்றின் தலைமை அலுவலகத்தை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.
பீஷான்-தோபாயோ குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுபாட், ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலத்தின் பொருளியல் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார்.
சிங்கப்பூரின் பலத்தை அதிகரிக்கும் விதமாக ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் உள்ளது. மேலும் அது சிங்கப்பூரின் திறனை வளர்க்கவும் சிங்கப்பூரர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகளைத் தரும் என்றும் திரு டான் பதிலளித்தார்.
உற்பத்தி, தளவாடங்கள், மின்னிலக்க பொருளியல் உள்ளிட்ட துறைகள் இதில் நல்ல பலனை அடையும், அவர்களின் வர்த்தகம் தொழில் சிறக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டுள்ள பல நிறுவனங்கள் ஜோகூரிலும் செயல்படுகின்றன. தற்போது உருவான சிறப்புப் பொருளியல் மண்டலம் மூலம் அவர்களுக்கு வர்த்தகம் மேலும் எளிதாக மாறியுள்ளது,” என்றார் அவர்.
இந்தச் சிறப்புப் பொருளியல் மண்டலம் மூலம் மேலும் பல முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றும் சிங்கப்பூர் நிறுவனங்களிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் ஆல்வின் டான் தெரிவித்தார்.
ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் மண்டலம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது. இந்த பொருளியல் மண்டலம் மூலம் இரு நாடுகளிலும் 20,000 வேலைகளை உருவாக்கும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் இது முதல் 5 ஆண்டுகளில் 50 திட்டங்களை தொடங்க உதவியாக இருக்கும். 10 ஆண்டுகளில் 100 திட்டங்கள் தொடங்க துணையாக இருக்கும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

