சிங்கப்பூரில் புகைப்படம் மற்றும் காணொளிப் படம் எடுத்தல் முக அலங்காரம் செய்தல் போன்ற படைப்புத் திறன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டு சுயசார்பு ஊழியர்களைப் பணியில் அமர்த்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மனித வள அமைச்சும் சிங்கப்பூர் ஒளி, ஒலி, படைப்பு உள்ளடக்க நிபுணர் சங்கமும் (விக்பா - Vicpa) இணைந்து ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளன. “சுற்றுப் பயணமாகவும் படிக்கவும் சிங்கப்பூருக்கு வருபவர்கள் புகைப்படம் மற்றும் காணொளிப் படம் எடுக்கும் சேவைகளிலும் முக அலங்காரம் போன்ற படைப்புத் திறன் சேவைகளிலும் ஈடுபட அனுமதி இல்லை.
“அதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக அத்தகையோரை சேவையில் அமர்த்தவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் கூடாது,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற திருமணங்களுக்கு புகைப்படம் மற்றும் காணொளிப் படங்களை எடுக்கவும் மணமக்கள் அலங்காரத்துக்கும் அந்தச் சேவைகளை சுயமாகச் செய்யும் வெளிநாட்டினரை சில நிறுவனங்கள் ஈடுபடுத்தியதாக மனிதவள அமைச்சுக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து உள்ளூரில் அந்தச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் சங்கமும் அமைச்சும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.
அதுபோன்ற வேலை ஏற்பாடுகள் சட்டவிரோதமானவை. மேலும் வெளிநாட்டினர் வேலைவாய்ப்புச் சட்டத்தை (EFMA) மீறுவதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான வேலை அனுமதி அட்டை இன்றி சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு $20,000 வரையிலான அபராதமும் ஈராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் இங்கு வேலை செய்யவும் தடை விதிக்கப்படலாம்.
அதேபோல, வெளிநாட்டினரை சட்டவிரோதமாக பணியில் அமர்த்தும் நிறுவனங்களும் தண்டனைகளை எதிர்நோக்கும்.
தொடர்புடைய செய்திகள்
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஓர் அங்கமான ‘விக்பா’ சங்கம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு அலங்காரம் மற்றும் படைப்புச் சேவைகளுக்கு உள்ளூரில் உள்ள படைப்புத் திறனுள்ள சுயசார்பு ஊழியர்களையும் நிபுணர்களையும் பயன்படுத்துமாறு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.