ஓராண்டு நிறைவு: நெருக்கடியான சூழலில் நாட்டை வழிநடத்தும் மசெக அரசாங்கம்

ஓராண்டு நிறைவு: நெருக்கடியான சூழலில் நாட்டை வழிநடத்தும் மசெக அரசாங்கம்

2 mins read
7d40d07d-c762-4331-8bf4-176390526e70
உலகளாவிய சவால்களுக்கு இடையே நாட்டை பிரதமர் லாரன்ஸ் வோங் தலைமையிலான மசெக அரசாங்கம் வழிநடத்தி வருகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2025ஆம் ஆண்டில் பொதுத்தேர்தல் நடைபெற்று ஓராண்டாகிவிட்டது. அந்தத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

திரு லீ சியன் லூங்குக்கு அடுத்ததாக பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட லாரன்ஸ் வோங், 2025 மே 3ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் மக்கள் செயல் கட்சியை வழிநடத்தினார். சிங்கப்பூர் அரசாங்கத்தின் தலைவராக அவர் எதிர்நோக்கிய முதல் தேர்தல் அது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பல புதிய முகங்களை மசெக வேட்பாளர்களாக அவர் களத்தில் இறக்கியிருந்தார்.

பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு வேலையைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறிய அவர், உலகம் ஆபத்தானதாக மாறி வரும் சூழ்நிலையில் நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஏராளமான பணிகள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி மட்டுமே நாடாளுமன்றத்தில் நீடித்திருக்க முடிந்தது. மற்றொரு கட்சியான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தமது பிரதிநிதித்துவத்தை முழுமையாக இழந்தது.

சிங்கப்பூர் உலகளாவிய பல சவால்களை எதிர்நோக்குகிறது.

ஈரான் போர், எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை, செயற்கை நுண்ணறிவின் தாக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, பொருளியல் முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் போன்றவை அவற்றில் சில.

சிங்கப்பூருக்கு நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே மசெக, அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளுடன் தனது புதிய ஆட்சியைத் தொடங்கியிருந்தது.

நல்ல வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கானப் பொருளாதாரத்தை மறுசீரமைப்பது, கல்வி போன்ற துறைகளில் உள்ள சிக்கலான சமூகக் கொள்கைப் பிரச்சினைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் அது கவனம் செலுத்தி வந்தது.

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்டுள்ள விலை உயர்வுகளை சிங்கப்பூர் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இன்னும் மோசமான நிலை வரவிருக்கிறது என்பது அரசாங்கத்தின் கூற்றாக இருக்கிறது.

இந்த நிலையில் அதன் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஆதரவு திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது.

தேவை ஏற்பட்டால் மேலும் உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, தேசிய அளவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வரவுசெலவுத் திட்டத்தையும், கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றும் இணையம்வழித் தீங்குகளை எதிர்த்துப் போராடும் சட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அண்மையில் மே தினப் பேரணியில் உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங், நெருக்கடிநிலை மேலும் மோசமானால் சிங்கப்பூரர்களுக்கு அரசாங்கம் மேலும் உதவிக்கரம் நீட்டும் என்றார்.

அது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளையும் மாற்றியமைப்பதால் ஒவ்வொரு வேலையையும் அரசாங்கத்தால் பாதுகாக்க முடியாமல் போகலாம், ஆனால் ஒவ்வோர் ஊழியரையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குடும்பங்களுக்கு உதவ யு-சேவ் தள்ளுபடி, மேம்படுத்தப்பட்ட வழங்குதொகை, சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட உதவிகளை முன்னரே வழங்கவும் அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்