சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக புதன்கிழமை (மே 15) பதவியேற்றதற்கு அடுத்த நாள் திரு லாரன்ஸ் வோங் பணியைத் தொடங்கிவிட்டார்.
பிரதமர் பதவியில் முதல் நாள் பணி குறித்து வியாழக்கிழமை (மே 16) மாலை 6 மணிக்கு சமூக ஊடகத்தில் அவர் பதிவிட்டார்.
பிரதமர் வோங், பிற்பகலில் தமது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இஸ்தானாவில் சந்திப்பு நடந்த அறை, இதற்கு முந்தைய குழு பயன்படுத்திய அறையைவிட மாறுபட்டதாகவும் பெரிதாகவும் தெரிந்தது.
“எங்களுக்கு முன்னால் ஏராளமான பணிகள் உள்ளன. நமது அடுத்த கட்டத்தில் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்ல உங்கள் அனைவருடனும் சேர்ந்து பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்,” என்று பிரதமர் வோங் பதிவில் கூறினார்.
பிரதமராகப் பதவியேற்று திரு வோங் புதன்கிழமை இரவு ஆற்றிய முதல் உரையில், மக்கள் மிகச் சிறந்த ஆற்றலுடன் கூடிய சமுதாயத்தை உருவாக்கும் லட்சிய இலக்கை எட்டுவதில் தம்முடன் சேர்ந்து பணியாற்ற சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
“நமது நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. நமது எதிர்காலத்தை அமைப்பதில் ஒவ்வொருவரும் முக்கியப் பங்காற்றுவீர்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்த ஒருவர், சிங்கப்பூர் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளது இதுவே முதன்முறை.