சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பின் முதல் தலைவர் ஜூலை 1ல் ஓய்வு

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பின் முதல் தலைவர் ஜூலை 1ல் ஓய்வு

2 mins read
398538ca-5dca-4208-bc9e-0d029894e8de
61 வயது திரு டேவிட் கோ, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பில் 11 ஆண்டுகள் இருந்தார்.  - படம்: சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு

சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் முதல் தலைவர் டேவிட் கோ ஜூலை முதல்தேதி ஓய்வுபெறுகிறார்.

61 வயது திரு கோ, அமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பில் 11 ஆண்டுகள் இருந்தார். அவர் பொதுச் சேவைத் துறையில் 42 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து திரு கோ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துவருகிறார். 2018லிருந்து அவர் இணையப் பாதுகாப்புத் துறையின் ஆணையராகவும் இருக்கிறார்.

திரு கோவுக்குப் பதிலாக அரசாங்கத் துறையின் மூத்த அதிகாரி குவெண்டா ஃபோங் தலைமைப் பொறுப்பை ஏற்பார். 48 வயதாகும் அவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இவ்வாண்டு மார்ச் வரையிலும் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சில் மின்னிலக்கச் சமுதாய, வளர்ச்சிப் பிரிவின் துணைச் செயலாளராக இருந்தார்.

பொதுச் சேவைத் துறையில் தொழில்நுட்பம், பாதுகாப்பு, சமுதாயக் கொள்கை போன்ற பிரிவுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்றவர் திருவாட்டி ஃபோங்.

திரு கோவின் சேவையை அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சிங் காய் ஃபோங் பாராட்டினார்.

“திரு கோ, இணையப் பாதுகாப்பு அமைப்பை முதல் கட்டத்திலிருந்து உருவாக்கியவர்; இணையப் பாதுகாப்பில் சிங்கப்பூருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர்; தேசியக் கட்டமைப்புகளையும் சட்டதிட்டங்களையும் நிறுவுவதிலிருந்து இணைய அரசதந்திரத்தில் அனைத்துலக அளவில் சிங்கப்பூரின் குரலை நம்பத்தகுந்ததாக, மதிப்புமிகுந்ததாக நிலைநிறுத்தியவர். வரும் ஆண்டுகளில் அமைப்பு பெறவிருக்கும் தொடர் வெற்றிகளுக்கு அவரின் அர்ப்பணிப்பும் தொலைநோக்குடன்கூடிய தலைமைத்துவமும் வித்திட்டுள்ளன,” என்றார் அவர்.

இணையப் பாதுகாப்பு அமைப்பில் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்தபோது, திரு கோ பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். அவை சிங்கப்பூரின் தேசிய இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்த உதவியாக இருந்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இணையப் பாதுகாப்புதலைவர்ஓய்வு