‘ஃபர்ஸ்ட்டேட்’ திட்டம்: சக அரசாங்க ஊழியர்கள் இணைக்கப்படுவதில்லை

ஒற்றையராக இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்காக உருவான திட்டம்

‘ஃபர்ஸ்ட்டேட்’ திட்டம்: சக அரசாங்க ஊழியர்கள் இணைக்கப்படுவதில்லை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 Oct 2026 - 1:26 pm

1 mins read

கவ்டெக் அமைப்பு, புதிய ‘டேட்டிங்’ திட்டத்தில் இணையும் அரசாங்க ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் அதே அமைப்பைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் இணைக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

தனது ‘ஃபர்ஸ்ட்டேட்’ திட்டத்தில் 21 வயதிலிருந்து 35 வயதுக்கு இடையில் ஒற்றையராக இருக்கும் அரசாங்க ஊழியர்கள் மட்டுமே இணைய முடியும் என்று கூறிய அது, “குறிப்பிட்ட அந்த வயதில் உள்ளோர் மற்றவர்களைச் சந்தித்துப் பழகவும் திட்டத்தின் சேவையைப் பயன்படுத்திப் பார்க்கவும் விருப்பமாக இருப்பார்கள்,” என்றது.

சோதனைத் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் வைப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை வைத்து திட்டத்தைச் சோதிக்க முடியும் என்று அமைப்பு விளக்கம் அளித்தது.

கவ்டெக் அமைப்பின் வருடாந்தர ‘ஹெக்கத்தான்’ நிகழ்ச்சியிலிருந்து உதித்த ‘ஃபர்ஸ்ட்டேட்’ திட்டம் திருமணமாகாத அரசாங்க ஊழியர்களிடம் சோதிக்கப்படுகிறது.

திட்டம் தொடர்பில் செப்டம்பர் 29ஆம் தேதி அரசாங்க ஊழியர்களுக்கு அமைப்பு மின்னஞ்சல் அனுப்பியது. அதற்கான பதிவு இம்மாதம் 5ஆம் தேதியுடன் முடிவடையும். அதன்பின் பொருத்தமான அரசாங்க ஊழியர்கள் நேரில் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

“முன்னோடிக் கட்டத்தைத் தாண்டி ‘ஃபர்ஸ் டேட்’ திட்டத்தை விரிவுபடுத்தவும் அறிமுகப்படுத்தவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என்று கவ்டெக் குறிப்பிட்டது.

கவ்டெக்கின் ‘2026 ஹெக்கத்தான்’ நிகழ்ச்சி இவ்வாண்டு ஏப்ரல் 13ஆம் தேதியிலிருந்து மே 25ஆம் தேதிவரை நடைபெற்றது. அதில் இணையப் பாதுகாப்பு, சுகாதாரப் பராமரிப்பு உள்ளிட்ட 270 திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
அரசாங்க ஊழியர்சந்திப்புதிட்டம்