சிங்கப்பூரில் முதல் முறையாகப் பன்னாட்டு இணையப் பாதுகாப்புப் பயிற்சி

சிங்கப்பூரில் முதல் முறையாகப் பன்னாட்டு இணையப் பாதுகாப்புப் பயிற்சி

2 mins read
பயிற்சியில் 29 நாடுகள் பங்கேற்பு
cfbd88b7-6f0d-4ee0-a3a5-9b02d2a30e50
சிங்கப்பூரின் மின்னிலக்க, உளவியல் சேவையும் பிரிட்டிஷ் ஆயுதப்படையும் இணைந்து உருவாக்கிய ஒரு கூட்டுக் குழு, அவற்றின் இணையப் பாதுகாப்பு உத்தி குறித்து திட்டமிடுகிறது. - படம்: தற்காப்பு அமைச்சு

பிப்ரவரி 9 முதல் 13ஆம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறும் இணையப் பாதுகாப்புப் பயிற்சியில், 29 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆயுதப்படைகள், அரசாங்க அமைப்புகள், தொழில்துறைப் பங்காளிகள் என 2,500க்கும் மேற்பட்ட இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சிங்கப்பூரில் நேரடியாகவோ அல்லது உலகம் முழுவதும் இருந்து இணையம் வழியாகவோ கலந்துகொள்ளும் இப்பங்கேற்பாளர்கள், மேம்பட்ட தொடர்ச்சியான அச்சுறுத்தல் (Advanced Persistent Threat – APT) செயற்பாட்டாளர்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு மாதிரி இணையத் தாக்குதல்களைச் சமாளிக்கும் அனுபவத்தைப் பெறவுள்ளனர்.

பிரிட்டிஷ் ராணுவ இணையச் சங்கம் நடத்தும் ‘டிஃபென்ஸ் சைபர் மார்வெல்’ பயிற்சி, 2026ஆம் ஆண்டில் ஐந்தாவது முறையாக நடைபெறுகிறது. இந்நிகழ்வு முதன்முறையாக சிங்கப்பூரில் நடத்தப்படுகிறது.

“சிங்கப்பூரின் மின்னிலக்க, உளவுத்துறை சேவையின்கீழ் செயல்படும் பாதுகாப்பு இணையக் கட்டளைப் பிரிவு மற்றும் அதற்கு இணையான பிரிட்டிஷ் ஆயுதப்படைப் பிரிவுகள் இணைந்து ஒருங்கிணைந்த இணையப் பாதுகாப்பு அணியை அமைத்து, உண்மையான உலகச் சூழலைப் பிரதிபலிக்கும் பாவனை மாதிரியாக உருவாக்கப்பட்ட சிக்கலான இணைய அச்சுறுத்தல்களை எதிர்த்து செயல்படவுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

“முக்கிய உள்கட்டமைப்புகள், அரசு கட்டமைப்புகள், தனியார் துறை கணினி அமைப்புகளை இலக்காகக் கொண்ட பல்வேறு மாதிரி இணையத் தாக்குதல்களுக்கு இந்த அணி பதிலளிக்கும்.

“வேகமாக மாறிவரும் மின்னிலக்க, இணையப் பாதுகாப்புச் சூழலில், மேம்பட்ட நிலைத்த, அச்சுறுத்தல் செயற்பாட்டாளர்களை எதிர்கொள்ளும் நடைமுறை அனுபவத்தை அவர்கள் பெறுவார்கள்,” என்று அமைச்சு மேலும் தெரிவித்தது.

பிரிட்டன் தற்காப்பு அமைச்சின்கீழ் செயல்படும் இணைய மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் தளபத்தியத்தின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் சுராயா மார்ஷல், “முன்னணி தொழில்நுட்ப, பாதுகாப்பு மையமாக உள்ள சிங்கப்பூரின் நிலை, இத்தகைய பெரிய அளவிலான பயிற்சியை நடத்த சிறந்த இடமாக அமைகிறது,” என்றார்.

“சிங்கப்பூரில் இந்தப் பயிற்சியை நடத்த தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தோ-பசிபிக் வட்டாரத்தின் உத்திபூர்வ முக்கியத்துவத்தையும், இணையப் பாதுகாப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதில் பிரிட்டன் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளையும் வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

நவீன ராணுவ நடவடிக்கைகளில் இணையப் பாதுகாப்பின் உயர்ந்து வரும் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது என தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

மேலும், பிரிட்டிஷ் ஆயுதப்படைகளுடன் இப்பயிற்சியில் சிங்கப்பூர் தொடர்ந்து பங்கேற்று வருவது, சிங்கப்பூர், பிரிட்டன் நாடுகளுக்கிடையிலான நீண்டகால அணுக்கமான இருதரப்பு தற்காப்பு உறவுகளை வெளிப்படுத்துகிறது என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்