கொவிட்-19 பெருந்தொற்றால் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து பயணம் தடைபட்ட நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வரும் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு முதல் விமானத்தை இயக்கவிருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இருவாரங்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் சிங்கப்பூர் - பெய்ஜிங் பயணிகள் விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கவிருக்கிறது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி பெய்ஜிங் - சிங்கப்பூர் பயணிகள் விமான சேவையை அந்நிறுவனம் மீண்டும் தொடங்கியது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அவ்விமானம் இயக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திங்கட்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் சிங்கப்பூர் - ஷாங்காய் இடையேயும் விமானங்களை இயக்கி வருகிறது.
சீனாவின் சொங்சிங், ஷென்ஸென், செங்டு, சியாமென் ஆகிய நகரங்களுக்கும் விமானங்களை இயக்கி வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனப் பேச்சாளர் கூறினார். ஆயினும், சிங்கப்பூர் - குவாங்சோ இடையிலான விமான சேவை இன்னும் திரும்பவில்லை.
"பயணத் தேவையைக் கண்காணித்து, சாத்தியமிருப்பின் சிங்கப்பூர் - சீனா இடையே படிப்படியாகப் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரிகளுடன் அணுக்கமாகப் பணியாற்றுவோம்," என்றும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.
கொவிட்-19 பரவலையடுத்து, கடந்த 2020 மார்ச் 28ஆம் தேதி சிங்கப்பூர் - பெய்ஜிங் இடையே விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.


