கார் லைட், கெட்கோ, டிரைப்கார் ஆகிய மூன்று கார் பகிர்வு நிறுவனங்கள் ‘கேஸ்டிரஸ்ட்’ சான்றிதழைப் பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட 3,000 இடங்களில் ஏறத்தாழ 5,000 வாகனங்களை இயக்கும் அவை, கார் பகிர்வு வணிகங்களுக்கான வெள்ளித் தரச்சான்றிதழைப் பெற்ற முதல் நிறுவனங்கள் எனச் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவித்தது.
போக்குவரத்து, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் சான்றிதழ்களை வழங்கினார்.
வாகனப் பாதுகாப்பு, வெளிப்படையான கட்டணமுறை, சர்ச்சைகளுக்குத் தீர்வுகாண்பதில் கடுமையான தரநிலைகளை அத்திட்டம் வலியுறுத்துகிறது.
அதன்படி, நிறுவனங்கள் 10,000 கிலோமீட்டர் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாகனங்களைப் பராமரித்து, முறையான பதிவேடுகளை வைத்திருக்க வேண்டும். கட்டண விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பதோடு, வாடிக்கையாளர் புகார்களுக்கு 21 வேலை நாள்களுக்குள் தீர்வுகாண வேண்டும்.
எதிர்பாராத கட்டணங்கள், வாகனச் சேத மதிப்பீடுகள் தொடர்பில் ஜனவரி 1 முதல் அக்டோபர் 31 வரை கார் பகிர்வு நிறுவனங்களுக்கு எதிராக 168 புகார்கள் பதிவாகின.
இதனிடையே, கார் பகிர்வுச் சேவைகளைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான பயனீட்டாளர் வழிகாட்டி நூலையும் சங்கம் வெளியிட்டுள்ளது.
புதிய சான்றிதழ் பெறுவதன்மூலம் பயனீட்டாளர்களிடம் நம்பிக்கையை வளர்க்க முடியும் எனக் குறிப்பிட்டு, மூன்று நிறுவனங்களின் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.
