ஹஜ் புனித யாத்திரையை வெற்றிகரமாக நிறைவேற்றிய சிங்கப்பூர் முஸ்லிம் யாத்திரிகர்களின் முதல் குழு, திங்கட்கிழமைப் (ஜூன் 1) பிற்பகல் சாங்கி விமான நிலையத்தின் 3ஆம் முனையத்தை வந்தடைந்தது.
அங்கீகரிக்கப்பட்ட ஏழு பயண முகமைகள் வாயிலாகச் சென்ற 302 யாத்திரிகர்களைக் கொண்ட இக்குழு, ‘சவூதியா ஏர்லைன்ஸ்’ விமானம் மூலம் நாடு திரும்பியதாக முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புனித யாத்திரைக்குச் சென்ற இதர யாத்திரிகர்கள் இன்னும் சவூதி அரேபியாவிலேயே இருப்பதாகவும் அவர்கள் ஜூன் 5, 8ஆம் தேதிகளில் நாடு திரும்புவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்தில் யாத்திரிகர்களை வரவேற்க முயிஸ் தலைமை நிர்வாகி காதிர் மைதீன், துணைத் தலைமை நிர்வாகி அல்பக்ரி அஹ்மது ஆகியோர் சென்றிருந்தனர்.
யாத்திரிகர்களின் குடும்ப உறுப்பினர்களும் மூன்றாம் முனையத்தில் கூடியிருந்தனர்.
ஹஜ் யாத்திரைக்குத் தலைமை ஏற்றுச்சென்று திரும்பிய, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் இதுதொடர்பான பதிவு ஒன்றைத் தமது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
புனித யாத்திரையை முடித்துத் திரும்பியவர்கள் தற்போது தங்களது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மீண்டும் இணைந்திருப்பதைக் கண்டு மகிழ்கிறேன்,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்தர ஹஜ் புனிதப் பயணத்திற்கு சிங்கப்பூரிலிருந்து 900 முஸ்லிம் யாத்திரிகர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
300 பேர் அடங்கிய இறுதிக் குழு, மே 14ஆம் தேதி சவூதி அரேபியாவிலுள்ள மதீனா நகருக்குப் புறப்பட்டதாக முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

