சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (கேஸ்) 2026ஆம் ஆண்டின் முற்பாதிக்கான பட்டியலில், அழகுத் துறை தொடர்பான பயனீட்டாளர் புகார்கள் முதலிடம் பிடித்தன. இதில், $1.9 மில்லியனுக்கும் அதிகமான முன்பண இழப்புகள் பதிவாகியுள்ளன.
இது, 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான $108,000 தொகையை விட கிட்டத்தட்ட 18 மடங்கு அதிகம் என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) கேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்பண இழப்புகள் என்பது, பயனீட்டாளர் சேவைகளுக்காக முன்கூட்டியே பணம் செலுத்தியும், அந்தச் சேவைகள் ஒருபோதும் வழங்கப்படாத நிலையைக் குறிக்கிறது.
2026ஆம் ஆண்டின் முற்பாதியில் கேஸ் சங்கத்துக்கு அளிக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கையில் அழகுத் துறை 1,124 புகார்களுடன் முதலிடம் பிடித்தது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 558 புகார்களை விட இரண்டு மடங்குக்கும் அதிகம். 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கேஸ் பெற்ற புகார்களின் பட்டியலில் மோட்டார் வாகனத் துறை 573 புகார்களுடன் முதலிடம் பிடித்திருந்தது.
பல அழகு மற்றும் ஆரோக்கிய வணிகங்கள் திடீரென மூடப்பட்டதே, அழகுத் துறையில் புகார்கள், முன்பண இழப்புகள் அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் என்று கேஸ் கூறியது.
மொத்தத்தில், ஜனவரி முதல் ஜூன் வரை கேஸ் பெற்ற 6,684 புகார்கள், 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவான 6,253 புகார்களை விட 6.9 விழுக்காடு அதிகம்.
கேஸ் சங்கத்துக்குப் புகார்கள் வந்த முதல் ஐந்து தொழில்துறைகளில் மின்சாரம் மற்றும் மின்னணுவியல், மோட்டார் கார்கள், பயணம் மற்றும் இல்லப் புதுப்பித்தல் ஒப்பந்ததாரர்கள் ஆகியவை அடங்கும். 2025ஆம் ஆண்டின் முற்பாதியில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவை மோட்டார் கார்கள், மின்சாரம் மற்றும் மின்னணுவியல், அழகுசாதனப் பொருள்கள், இல்லப் புதுப்பித்தல் ஒப்பந்ததாரர்கள், தொலைத்தொடர்பு ஆகியவை ஆகும்.
2026ஆம் ஆண்டின் முற்பாதியில் அழகுத் துறைக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட 1,124 புகார்களில், பத்தில் கிட்டத்தட்ட நான்கு புகார்கள், நிறுவனங்கள் தங்களின் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியது தொடர்பானவை.
திடீரென நிறுவனங்கள் மூடப்பட்டதன் காரணமாக, பயனீட்டாளர் தாங்கள் பணம் செலுத்திய சேவைகளைப் பெறாத நிகழ்வுகளும் இதில் அடங்கும்.
குறிப்பாக வணிகங்கள் திடீரென மூடப்படும்போது, அழகுச் சாதனத் தொகுப்புகளுக்குப் பெரிய தொகையை முன்பணமாகச் செலுத்துவதில் உள்ள அபாயங்களை, முன்பணம் செலுத்துவதால் ஏற்படும் இழப்புகளின் அதிகரிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத் தலைவர் மெல்வின் யோங் கூறினார்.
“பயனீட்டாளர்கள் முடிந்தவரை பெரிய அளவில் முன்பணம் செலுத்துவதைத் தவிர்த்து, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் அல்லது சிறிய தவணைகளில் பணம் செலுத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.


