இந்தியாவின் முதல் அனைத்துலக ‘இன்வெஸ்ட் இந்தியா’ அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு

இந்தியாவின் முதல் அனைத்துலக ‘இன்வெஸ்ட் இந்தியா’ அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு

2 mins read
இனி இந்தியாவில் முதலீடு செய்வது குறித்த அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் பெறலாம்.
92fb4a1d-2ff5-48d9-bd16-d7c1eb1a362f
இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சர் பியூ‌ஷ் கோயல், ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள புதிய ‘இன்வெஸ்ட் இந்தியா’ அலுவலகத்தைத் திறந்துவைத்தார். - படம்: சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரகம்
multi-img1 of 2

சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யத் தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் நோக்கத்தில், இந்தியாவின் தேசிய முதலீட்டு மேம்பாட்டு அமைப்பான ‘இன்வெஸ்ட் இந்தியா’வின் முதல் அனைத்துலக அலுவலகம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வர்த்தக, தொழில் அமைச்சரான பியூ‌ஷ் கோயல், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22), சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் சிங்கப்பூர் வந்திருந்தபோது இது குறித்து அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பிலிருந்து இரு வாரங்களில் இந்த அலுவலகம் திறக்கப்படுவது புதிய இந்தியாவின் வேகத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறினார் அமைச்சர் பியூ‌ஷ்.

“இவ்வாண்டு இந்தியாவில் சிறப்பான எண்ணிக்கையில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், எண்கள் மட்டுமே எல்லாம் என்றில்லை. முதலீடுகளின் தரமும் முக்கியம். நெடுங்கால முதலீடும் முக்கியம்,” என்றார் அவர்.

“நாங்கள் 20 புதிய தொழில்துறை அறிவார்ந்த நகரங்களை உருவாக்கி வருகிறோம். ஆனால், இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புவோர் தகவல்கள், அனுமதிகளைப் பெற இந்த 20 இடங்களுக்குச் செல்ல வேண்டியிருக்காது. இதற்காக இப்புதிய அலுவலகத்தில் ஒரு வணிகப் பிரதிநிதியைப் பணியமர்த்துவோம்,” என்றார் அமைச்சர் பியூ‌ஷ்.

இந்தியாவில் முதலீடு சார்ந்த சில விதிமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனக் கருத்துகள் நிலவினால் அவற்றைக் கேட்க அரசாங்கம் தயார் என்று கூறிய அவர், அனைத்து மாநிலங்களிலும் முதலீட்டுக்கான சவால்கள் இருப்பதில்லை எனக் கூறினார்.

“சில மாநிலங்களில் சவால்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் புத்திசாலிகள் என்பதால் அவர்களால் வணிகத்துக்கான சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்,” என்றார் அவர்.

‘இன்வெஸ்ட் இந்தியா’, வெளிநாடுகளில் திறக்கவுள்ள நான்கு புதிய அனைத்துலக அலுவலகங்களில் முதலாவதை சிங்கப்பூரில் திறப்பது, இரு நாடுகளுக்கிடையிலான வலுவான வர்த்தகப் பங்காளித்துவத்தைப் பறைசாற்றுகிறது.

இதையடுத்து ‘இன்வெஸ்ட் இந்தியா’ யுஏஇ (துபாய்), சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் அலுவலகங்களைத் திறக்கவுள்ளது.

“இந்தியாவில் முதலீடு செய்வது குறித்துப் பலருக்கும் இன்னும் முழு விவரங்கள் தெரிவதில்லை. வதந்திகளும் நிலவுகின்றன. இப்புதிய அலுவலகம் இந்த வதந்திகளைத் தகர்த்தெறியும்,” என்றார் இன்வெஸ்ட் இந்தியா துணைத் தலைவர் ராஜா சிங் குரானா. இந்தியாவில் முதலீடு செய்ய உதவும் மற்ற சிங்கப்பூர் அமைப்புகளோடு இணைந்து செயல்பட அவர் விருப்பம் தெரிவித்தார்.

இன்வெஸ்ட் இந்தியா சிங்கப்பூர் அலுவலகம் குறித்த விவரங்களுக்கு raja.khurana@investindia.org.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்