டௌன்டவுன் ரயில் பாதையில் கட்டப்பட்டு உள்ள ஹியூம் எம்ஆர்டி நிலையம் மஞ்சள்நிற கிரானைட் முகப்புடன் கட்டடக் கலை அழகை வெளிப்படுத்துகிறது.
அருகில் உள்ள புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியைப் பிரதிபலிக்கும் வண்ணம் அதன் முகப்பு அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நிலையத்தின் உட்புற அலங்காரம் பச்சை, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களுடன் அமைந்துள்ளது.
பச்சை நிறம், அருகில் உள்ள ரயில் பசுமைப் பாதையைக் குறிக்கும். அதேபோல, மஞ்சள் நிறம், புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதியில் இடம்பெற்றுள்ள கிரானைட் குவாரிகளை நினைவுபடுத்தும்.
அத்துடன், முன்னாள் ஃபோர்ட் தொழிற்சாலையைக் குறிக்கும் வகையில் வெள்ளைநிறம் சேர்க்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதுபோன்ற ஆர்வத்தைத் தூண்டும் அம்சங்களின் அடிப்படையில் நிலையத்தின் அலங்காரம் அமைக்கப்பட்டு உள்ளது என்று, பிப்ரவரி 12ஆம் தேதி ஊடகங்களுக்கு ஏற்பாடு செய்த முன்னோட்ட நிகழ்வில் ஆணையம் கூறியது.
இம்மாதம் 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் திறக்கப்பட இருக்கும் அந்த நிலையம், புக்கிட் தீமா வட்டாரத்தில் டௌன்டவுன் பாதையின் ஹில்வியூ நிலையத்திற்கும் பியூட்டி வோர்ல்டு நிலையத்திற்கும் இடையே அமைந்துள்ளது.
அந்த இரு எம்ஆர்டி நிலையங்களுக்கும் இடையில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு ஹியூம் நிலையம் சேவையாற்றும். அந்த நிலையத்திற்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. அப்பர் புக்கிட் தீமா ரோட்டை நோக்கி ஒன்றும் ஹியூம் அவென்யூவை நோக்கி மற்றொன்றும் அமைக்கப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டௌன்டவுன் பாதையின் இரண்டாம் கட்டக் கட்டுமானத்தில் திறக்கப்படும் இறுதி நிலையம் இது.
டௌன்டவுன் பாதையின் இரண்டாம் கட்டச் சேவை 2015ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது.
அதே ஆண்டு அந்த நிலையத்தில் பதுங்கும் இடத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணி தொடங்கியது.
பின்னர் 2021ஆம் ஆண்டு அதன் வடிவமைப்பு தொடங்கியது. நீண்டகாலமாகக் காலியாக இருந்த அந்நிலையம், குடியிருப்பாளர்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக அந்தப் பணிகள் தொடங்கின.
இருப்பினும், மேலும் சில மாதங்கள் கழித்து நிலையத்தின் சுற்றளவில் வெள்ளத்தடுப்புகள் பொருத்தப்பட்டு, நிலம் தோண்டும் பணி தொடங்கிய பின்னர்தான், நிலையம் அங்கு வரப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது.
நிலத்தடி நிலையக் கட்டுமானம் தொடங்கியபோது, தரைப்பகுதி நுழைவாயில் இல்லை என்பதால் கட்டுமான ஊழியர்கள் ஹில்வியூ நிலையத்திற்குள் நுழைந்து 700 மீட்டர் தூரக் கட்டுமானத் தண்டவாளத்தில் நடக்க வேண்டி இருந்தது.
கனரக கட்டுமான சாதனங்கள் உட்லண்ட்ஸ் ரோட்டின் அருகே உள்ள கலி பத்து பணிமனையில் இருந்து பொறியியல் ரயில் மூலம் ஹுயூம் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஆணையம் விளக்கியது.