சிங்கப்பூர், பூச்சி நிர்வாகச் சேவைகளின் செயல்திறனை மதிப்பிட, புதிய தரநிலையை (SS 721:2025) அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் ஒன்பதாவது அனைத்துலக டெங்கி பயிலரங்கில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி தரநிலை குறித்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அறிவித்தார்.
அந்தத் தரநிலையைத் தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர்ப் பூச்சி நிர்வாகச் சங்கமும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து உருவாக்கின.
அந்தத் தரநிலை நோய்த் தடுப்புக்கு முன்னுரிமை கொடுக்கும்; தொற்றுகளுக்கான காரணங்களை அடிப்படையிலிருந்து அகற்றுவதை வலியுறுத்தும்; ரசாயனங்கள் அற்ற தீர்வுகளையும் தொடர்ச்சியான கண்காணிப்பையும் பரிந்துரைக்கும்.
நவம்பார் மாத இறுதிக்குள் https://www.singaporestandardseshop.sg/Home/Index இணையத்தளத்தில் புதிய தரநிலையைக் காணலாம்.
‘புரோஜெக்ட் வோல்பாக்கியாவால் நல்ல பலன்கள்’
“ஒருங்கிணைந்த பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் சிங்கப்பூரில் இருப்பதற்கு ஒரு நல்ல உதாரணம், புரோஜெக்ட் வோல்பாக்கியா. அந்தத் திட்டத்தில், வோல்பாக்கியா கிருமியைக் கொண்ட ஆண் ‘ஏடிஸ் ஏஇஜிப்டாய்’ (Aedes aegypti) கொசுக்களைச் சுற்றுப்புறத்தில் வெளியிடுவதன்மூலம் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது,” என்றார் டாக்டர் ஜனில்.
“புரோஜெக்ட் வோல்பாக்கியா திட்டம் மூலம் கொசுக்கள் வெளியிடப்பட்ட இடங்களில் ‘ஏடிஸ் ஏஇஜிப்டாய்’ கொசுக்களின் எண்ணிக்கை 90 விழுக்காடு வரை குறைந்தது. டெங்கி ஏற்படுவதற்கான சாத்தியமும் 70 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்தது.
“சிங்கப்பூரில் உள்ள 50 விழுக்காட்டுக் குடியிருப்புப் பேட்டைகளில் அடுத்த ஆண்டுக்குள் வோல்பாக்கியா திட்டத்தை விரிவுபடுத்த தேசியச் சுற்றுப்புற வாரியம் உறுதியளித்துள்ளது,” என்றார் டாக்டர் ஜனில்.
தொடர்புடைய செய்திகள்
குடியிருப்பாளர்களில் 96 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
‘யுனைடட்டெங்கி’ பன்னாட்டு முயற்சியை விரிவாக்கும் திட்டம்
2009 முதல், சிங்கப்பூர் அனைத்துலக டெங்கி பயிலரங்கு, 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பொதுச் சுகாதாரத் துறையினருக்குப் பயிற்சி வழங்கியுள்ளது. 2012ல், ஆசியாவில் டெங்கி கண்காணிப்பு, கட்டுப்பாடு, ஆற்றல்களை வலுப்படுத்த ‘யுனைடட்டெங்கி’ (UNITEDengue) எனும் பன்னாட்டு முயற்சி தொடங்குவதற்கு இப்பயிலரங்கு வழிவகுத்தது.
தேசியச் சுற்றுப்புற வாரியத்தின்கீழ் உள்ள சுற்றுப்புற ஆரோக்கியக் கழகத்தின் தலைமையில், தெமாசெக் அறக்கட்டளையின் ஆதரவுடன், ‘யுனைடட்டெங்கி’ தற்போது 12 நாடுகளை இணைப்பதாகவும், ஜீகா, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் கிருமிகளையும் அது கண்காணிக்கவுள்ளதாகவும் டாக்டர் ஜனில் அறிவித்தார்.
2024ல், உலகம் இதுவரைக் காணாத அளவில், 111 நாடுகளில் கிட்டத்தட்ட 14.5 மில்லியன் டெங்கி தொற்றுகளும், 11,000 டெங்கி தொடர்பான இறப்புகளும் பதிவாகின. இது 2023ல் பதிவான 6.5 மில்லியன் டெங்கி தொற்றுகளைவிட இருமடங்கு அதிகம்.
இந்த ஆண்டில் நிலவரம் சற்று மேம்பட்டுள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை, 100 நாடுகளில் கிட்டத்தட்ட 4.5 மில்லியன் டெங்கி தொற்றுகளும், கிட்டத்தட்ட 3,000 டெங்கி தொடர்பான இறப்புகளும் நடந்துள்ளன.
உலகளவில் டெங்கி தொற்று சம்பவங்கள் எண்ணிக்கையில் இவ்வாண்டு முதல் நிலையை வகிப்பது பிரசில் (3,401,498), இரண்டாம் நிலையில் வருவது இந்தோனீசியா (119,133). ஐந்தாம் நிலையில் இந்தியா (68,356), ஒன்பதாம் நிலையில் மலேசியா (42,585) வருகின்றன.
“டெங்கி புதிய இடங்களுக்குப் பரவியுள்ளது. மோசமான டெங்கி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பருவநிலை மாற்றம், நகரமயமாதலினால் டெங்கி பரவலுக்கான அபாயம் அதிகரிக்கிறது. அதனால் டெங்கிப் பரவல் தடுப்பு, கண்காணிப்பு மேம்பட வேண்டும். அவசரநிலைகள் எழும்போது ஒரு நாடு தன் சொந்த வளங்களை நம்பியே அந்நிலையைக் கையாளும் நிலையை அடைய வேண்டும். தீவுகளுக்கெனத் தனிப்பட்ட திட்டம் தேவை,” என்றார் உலகச் சுகாதார அமைப்பின் விலங்குப் பொதுச் சுகாதாரப் பிரிவுத் தலைவர் டாக்டர் ராமன் வேலாயுதன்.

