போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ், எட்டோமிடேட் கொண்டுள்ள 43 மின்சிகரெட்டுகளைக் கடத்தும் நோக்கத்துடன் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட டெரெக் கோர் பூன் சுன், 40, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12), பிடிபட்ட இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
செப்டம்பர் 6ஆம் தேதி, அங் மோ கியோ அவென்யூ 4ல் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் பிடிபட்டதையடுத்து செப்டம்பர் 8ஆம் தேதி அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில், சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் அவரைப் பிடிபட்ட வாகன நிறுத்துமிடத்துக்கு அருகிலுள்ள புளோக் 631 குடியிருப்புக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவர் எதற்காகக் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனும் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
“சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் பொதுமக்கள் உடனடியாக, உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்துவதன் மூலம் மின்சிகரெட்டுகள், எட்டோமிடேட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் ஆகியவை சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதைத் தடுக்க முடிந்தது,” என்று கூறிய சுகாதார அறிவியல் ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி ரேமண்ட் சுவா, சிங்கப்பூரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கைகொடுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின்கீழ், எட்டோமிடேட் வகுப்பு ‘சி’ மருந்தாக வகைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட பிறகு குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் கோர்.
செப்டம்பர் 6ஆம் தேதியன்று, கோரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்துக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அவர் மின்சிகரெட்டுகள் வைத்திருந்ததுடன், மின்சிகரெட்டுகளைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்தது.
சுகாதார அறிவியல் ஆணையம் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ஏறத்தாழ 50 மின்சிகரெட்டுகளையும் அவற்றுடன் தொடர்புடைய பொருள்களையும் பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து, ஆய்வகச் சோதனையில் அவற்றில் எட்டோமிடேட் இருப்பது கண்டறியப்பட்டது.

