தெங்கா வட்டாரத்தின் முதல் ‘கொண்டோமினியம்’ வகையிலான ‘தெங்கா ரெஸிடன்ஸீஸ்’ என்ற தனியார் வீட்டுத் திட்டத்தின் வீடுகள் ஏறத்தாழ விற்றுத் தீர்ந்தன.
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) பிற்பகல் 3மணிக்குள்ளாக விற்பனைக்கு இருந்த 863 வீடுகளில் 853 வீடுகள் விற்பனையாகின என்று அத்திட்டத்தின் மேம்பாட்டாளரான ஹொங்லியோங் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
கடந்த வார இறுதியில் பொது மக்களுக்கென விற்பனைக்கு விடப்பட்ட வீடுகள், ஏறத்தாழ ஒரு சதுர அடி $2,120 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக அன்று விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் விலை ஒரு சதுர அடிக்கு $1,779 முதல் $2,340 வரை அமைந்தன.
மாரச் மாதத்திலிருந்து தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்து வருவதாக தனியார் சொத்து கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
விற்பனை ஆகாத மீதம் இருந்த 10 வீடுகள், கூடுதலாக முற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட நான்கு அறைகளைக் கொண்டவை என்று தெரிவிக்கப்பட்டது.

