ஜோகூரில் குப்பை போட்டதற்காகக் குற்றம் சாட்டப்படும் முதல் சிங்கப்பூரர்

ஜோகூரில் குப்பை போட்டதற்காகக் குற்றம் சாட்டப்படும் முதல் சிங்கப்பூரர்

படம்: மதர்ஷிப்

13 Mar 2026 - 6:18 pm

2 mins read

மலேசியாவின் ஜோகூர் பாருவில் குப்பை போட்டதற்காகக் குற்றம் சாட்டப்பட உள்ள 15 பேரில் ஐந்து சிங்கப்பூரர்களும் அடங்குவர்.

ஐந்து பேரில் முதல் நபரான 40 வயது சிங்கப்பூரர் மீது, ஏப்ரல் 1ஆம் தேதி குற்றம் சாட்டப்படும்.

ஜோகூர் மாநிலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் சிங்கப்பூரர் இவர் என்று மலேசியாவின் கழிவு மேலாண்மை நிறுவனமான எஸ்டபிள்யூகார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் தெரிவித்தார்.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின்படி, 15 பேருக்கான நீதிமன்ற விசாரணைகள் மார்ச் 28ஆம் தேதி தொடங்கும்.

அவர்களில் ஐந்து பேர் ஏற்கெனவே சமூக சேவை உத்தரவுகளைச் செயலாற்றத் தொடங்கியுள்ளனர்.

அண்மைய மாதங்களில், மலேசியா புதிதாக வலுப்படுத்தப்பட்ட குப்பை போடுதலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் குப்பை போடுபவர்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது.

புதிய மேம்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் உட்பட குற்றவாளிகள் இப்போது அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் 12 மணிநேரம் வரை சமூக சேவை செய்ய உத்தரவிடப்படலாம். அத்துடன் கூடுதலாக 2,000 ரிங்கிட் ($632) வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம். இந்த நடவடிக்கைகளில் குப்பைகளைச் சேகரிப்பது, பொது இடங்களைச் சுத்தம் செய்வது, புல் வெட்டுவது அல்லது சிலந்தி வலைகளை அகற்றுவது ஆகியவை அடங்கும்.

பிப்ரவரி 9ஆம் தேதி அன்று, சிகரெட் அப்புறப்படுத்தும் கொள்கலனுக்குப் பதிலாக பொது இடத்தில் சிகரெட் துண்டுகளை வீசியதற்காக 25 வயது சிங்கப்பூரர் ஒருவர் மீது புதிய விதிமுறைகளின் கீழ் முதல் குற்றம் சாட்டப்பட்டது.

கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் அவருக்கு நான்கு மணிநேரம் சமூக சேவை செய்ய உத்தரவிட்டதுடன் 1,500 ரிங்கிட் ($485) அபராதமும் விதித்தது.

குறிப்புச் சொற்கள்