தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இறப்பு குறித்த புரிதல் தொடர்பில் சிங்கப்பூரில் ஆய்வு

3 mins read
c783d826-a6e5-430d-842b-073c19567197
(இடமிருந்து) சிங்கப்பூர் அந்திமகால பராமரிப்பு மன்ற கௌரவச் செயலாளரும் சமூக மருத்துவ வாரியத்தின் துணைத் தலைவருமான டாக்டர் வூ ஹுவேய் யாவ், உட்லண்ட்ஸ் ஹெல்த் ஒருங்கிணைந்த பராமரிப்புத் துறைத் தலைவரும், சிங்கப்பூர் அந்திமகால பராமரிப்பு மன்றத்தின் நிர்வாக இயக்குநருமான சிம் பீ ஹியா, தெமாசெக் பல்துறைத் தொழிற்கல்லூரி மனிதநேய, சமூக அறிவியல் பள்ளியின் விரிவுரையாளரும் ஆய்வாளருமான டாக்டர் டெவின் சீ. - படம்: பெரித்தா ஹரியான்

சிங்கப்பூரில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானோர்க்கே இறக்கும் தறுவாயில் உள்ளோர்க்குத் தேவையான சுகாதாரக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது குறித்த புரிதல் இருப்பதாகவும், நால்வரில் ஒருவருக்கு மட்டுமே வீட்டில் மரணம் நிகழ்தல் தொடர்பான விதிமுறைகள் தெரிவதாகவும் அண்மை ஆய்வுமுடிவுகள் காட்டுகின்றன.

“அன்பிற்குரியவர்களுக்கு மரணம் நிகழும் வரை அதுகுறித்து யாரும் அதிகம் பேச விரும்புவதில்லை. ஆனால், மூப்படைந்து வரும் சமூகத்தில் அந்திமகால பராமரிப்புக்கும் இறப்புக்கும் சமூகம் எந்த அளவு தயாராகியுள்ளது என்பதை அறிவது அவசியம். அதுவே இந்த ஆய்வின் நோக்கம்,” என்றார் சிங்கப்பூர் அந்திமகால பராமரிப்பு மன்ற நிர்வாக இயக்குநர் சிம் பீ ஹியா.

இறப்பு குறித்தும் வாழ்வின் இறுதிக்காலப் பராமரிப்பு, மரணத்துக்குப் பிந்தைய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே உள்ள விழிப்புணர்வு தொடர்பான இறப்புசார் அறிவுக் குறியீட்டு (Death Literacy Index) ஆய்வு முதன்முறையாக நடைபெற்றுள்ளது.

அந்திமகால பராமரிப்பு மன்றம் சார்பில் தெமாசெக் பலதுறைக் தொழிற்கல்லூரி மேற்கொண்ட இந்த ஆய்வு, அந்திமக் காலம், இறப்பு தொடர்பான தரவுகள், சமூக ஆதரவு குறித்த அறிவு, நடைமுறை, அனுபவ அறிவு ஆகிய நான்கு அம்சங்களை ஆராய்ந்துள்ளது. ஆய்வு முடிவுகளுடன் விழிப்புணர்வுச் செயல்பாடுகளையும் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

அவ்வகையில், “முதற்கட்டப் பராமரிப்பாளர்களான மருத்துவர்களுக்கு அந்திமகால பயிற்சி, மேம்பாட்டு மானியமும் சமூக அந்திமகாலப் பராமரிப்புக் கட்டமைப்பும் அறிமுகப்படுத்தப்படும்,” என்றார் திருவாட்டி சிம்.

அந்திமகால நோயாளிக்குத் தனிப்பட்ட பராமரிப்பு அளித்தல், அந்திமகால பராமரிப்புக் கட்டமைப்புகள் குறித்த விழிப்புணர்வு, நோயின் தன்மை, தகவல் அடிப்படையிலான முடிவுகளை எடுத்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை இந்த ஆய்வு சோதித்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1,087 பேர் பங்கெடுத்தனர்.

மேலும், இறுதிச் சடங்கு, இறப்பு தொடர்பான சட்டதிட்டங்கள், தேவையான ஆவணங்கள், இறந்தவரின் உறவுகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் உள்ள தெளிவு குறித்த தகவல்களையும் இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, மூவரில் ஒருவருக்கு இறப்பு தொடர்பாக என்னென்ன ஆவணங்கள் தேவை எனத் தெரிந்துள்ளதாக ஆய்வு கூறியது. 43.1 விழுக்காட்டினருக்கு மனநல ஆதரவுக்கு யாரை அணுக வேண்டும் எனும் புரிதல் இருப்பதாகவும் 38.3 விழுக்காட்டினருக்கு இறுதிக்காலச் சமூக ஆதரவுகளை எவ்வாறு நாட வேண்டும் என்பது தெரிந்திருப்பதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.

ஒட்டுமொத்தமாக, இறப்புத் தகவல் குறியீட்டெண் 5.66 என்றும் அது இறப்பு குறித்த புரிதல் ஓரளவு இருப்பதைக் காட்டுகிறது என்றும் ஆய்வுக்குழு தெரிவித்தது.

இந்த ஆய்வு, தரவுகளைச் சேகரிப்பதுடன் நின்றுவிடாது தொடர்ந்த செயல்பாட்டுகளுக்கும் வழிவகுத்ததாகக் கூறினார் திருவாட்டி சிம்.

“பொதுவாக, இவைகுறித்த தகவல்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், நமது அன்பிற்குரியோரை மரணம் நெருங்கும்போது, அறிய வேண்டியவை அதிகமாகவும் நேரம் குறைவானதாகவும் இருக்கும். அந்நிலையைத் தவிர்த்து, ஒவ்வொருவருக்கும் சிறந்த ஆதரவு கிடைப்பதை இந்தச் செயல்பாடுகள் உறுதிசெய்ய வேண்டும்,” என்றார் அவர்.

இச்செயல்பாடுகளைத் தனிமனிதன், பராமரிப்பாளர், சமூகம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இணையத்தளத்தில் பராமரிப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வளங்கள் இருப்பதைத் திருவாட்டி சிம் சுட்டிக்காட்டினார். உரையாடல்கள், அவசர உதவி எண், டெலிகிராம் தளம் உள்ளிட்ட மின்னிலக்க ஆதரவுகள் செயல்படுவதையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூக மட்டத்தில் கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் ‘தலைவர்கள் மன்றம்’ (Leader’s Forum), தூதர்கள் கட்டமைப்பு, பலதரப்பட்ட பிரிவுகளை ஒன்றிணைக்கும் சிங்கப்பூர்க் கருணைச் சமூகங்கள் (Compassionate Communities Singapore) ஆகியவை மூலம் சமூக விழிப்புணர்வு முயற்சிகள் இடம்பெற்று வருவதையும் திருவாட்டி சிம் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்