தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புக்கிட் பாஞ்சாங்கில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்ச்சியின்போது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துக்கொண்டார்.

சொந்த வீட்டில் முதல் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

2 mins read
8dd8731a-a50e-4b8a-b6ad-3c4d10450930
பிரதமர் லாரன்ஸ் வோங்குடனும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடனும் நவீன் ராஜா-டர்ஷினி குடும்பத்தார். - படம்: நவீன் ராஜா

தெம்பனிசில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த நவீன் ராஜா, 37, புக்கிட் பாஞ்சாங்கில் இப்போது தம் சொந்த வீட்டில் முதன்முறையாக தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்.

மலேசியாவின் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் நவீன், 2017ல் சிங்கப்பூருக்கு வந்தார். ஜோகூர் பாருவைச் சேர்ந்த தடயவியல் விஞ்ஞானி டர்ஷினி ஜெயசிம்மனை திருமணம் செய்துகொண்டார். புக்கிட் பாஞ்சாங்கில் செஞ்சா ரோடு வீட்டிற்குள் இவர்கள் குடிபுகுந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன.

புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக லிட்டில் இந்தியாவில் மளிகைப் பொருள் வாங்கிய இத்தம்பதியர், வழிபாட்டுக்குப் பூசை அறையைத் தயார் செய்தனர்.

“காலையில் எழுந்தவுடன் நகைகள் போன்ற மங்களப் பொருள்களை முதன்முதலாகப் பார்க்கும்படியான ஏற்பாடுகளை நாம் செய்துவிடுவோம்,” என்று திரு நவீன் கூறினார்.

2024 ஜனவரியில் நவீன் ராஜா-டர்ஷினி இணையருடன் மகள் சஷ்டி.
2024 ஜனவரியில் நவீன் ராஜா-டர்ஷினி இணையருடன் மகள் சஷ்டி. - படம்: நவீன் ராஜா

புத்தாண்டு தினம் மாலையில் நண்பர்களை வீட்டுக்கு அழைக்கும் வழக்கம் இவர்களுக்கு உள்ளது.

“இந்தப் புத்தாண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், எங்கள் மகள் சஷ்டியுடன் நாங்கள் கொண்டாடும் முதல் புத்தாண்டு இது,” என திருவாட்டி டர்ஷினி, 34, மகிழ்ச்சியுடன் கூறினார். 

பென்டிங் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் உள்ள கூடாரத்தில் நவீன்-டர்ஷினி குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) பங்கேற்ற நிகழ்ச்சியைச் சிறப்பித்த பிரதமர் லாரன்ஸ் வோங், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக் கூறினார். பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போதைய காலகட்டம் கடினமாக இருந்தாலும், பதற்றத்தையும் உறுதியின்மையையும் கடந்து நிலைத்தன்மைக்கும் இணக்கத்திற்கும் சிங்கப்பூர் விடிவெள்ளியாக இருக்கும் என பிரதமர் வோங், நிகழ்ச்சியில் கூறினார்.

“நமக்கு இங்கு உள்ளவை மதிப்புமிக்கவை. எனவே, அவற்றை நாம் என்றும் மதித்துக் காப்பாற்ற வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்