2025ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக, 30,000க்கும் குறைவான பிறப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையே, வேகமாக மூப்படைந்து வரும் சமூகத்தில் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்து வரும் பிறப்புகள் மற்றும் அதிகரித்து வரும் இறப்புகள் ஆகிய இரட்டை மக்கள்தொகை சவால்கள், அரசாங்கத்தால் ஓர் அச்சுறுத்தலான சவாலாக விவரிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு குறித்த அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 29,864 குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2024ஆம் ஆண்டில் பிறந்த 33,703 குழந்தைகளைவிட 11.4 விழுக்காடு குறைவாகும். இந்த அறிக்கை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தால் (ஐசிஏ) திங்கட்கிழமை (ஜூலை 27) வெளியிடப்பட்டது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய ஆய்வில், 55,725 குழந்தைகள் பிறந்த 1965ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2025ஆம் ஆண்டில்தான் குழந்தைகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது என்பது தெரியவந்துள்ளது. 1970கள் முதல் 1990கள் வரை, பெரும்பாலான ஆண்டுகளில் ஆண்டுதோறும் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 40,000க்கு அதிகமாகவும் அதாவது 40,000 முதல் 50,000க்கும் அதிகமாகவே பதிவாகி இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளில், பெரும்பாலான ஆண்டுகளில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவாகவே இருந்து வந்துள்ளது.
2025ஆம் ஆண்டு பிறந்த அனைத்துக் குழந்தைகளிலும் 87 விழுக்காடு, அதாவது 26,071 குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் சிங்கப்பூரராக இருந்தார்.
திருமணம் செய்வதில் தாமதம்
இளையர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதால், முதல் முறை தாய்மார்களின் சராசரி வயது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏனெனில், வயது ஆக ஆக ஒரு பெண்ணின் கருவுறுதல் திறன் குறைகிறது. இது சிங்கப்பூரின் கருவுறுதல் சவாலை மேலும் அதிகரித்துள்ளது.
முதல் முறை தாய்மார்களின் சராசரி வயது 2021ல் 31.3 வயதிலிருந்து 2025ல் 32.1 ஆக அதிகரித்துள்ளது.
புதிய பணிக்குழு உருவாக்கம்
இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக, சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறந்த முறையில் ஆதரவளிப்பதற்கான வழிகளைக் கண்டறியும் நோக்கில், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 'திருமணம் மற்றும் பெற்றோர்நிலை மறுசீரமைப்புப் பணிக்குழு' என்றழைக்கப்படும் அமைப்புகளுக்கிடையிலான பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டில், 19 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய இளம் பெண்களுக்கு 140 குழந்தைகள் மட்டுமே பிறந்தன; இது 2024ல் பதிவுசெய்யப்பட்ட 244 பிறப்புகளை விட 43 விழுக்காடு குறைவாகும்.
இதற்கிடையே, இறப்பு எண்ணிக்கை 2024ல் 26,442லிருந்து 0.2 விழுக்காடு அதிகரித்து 2025ல் 26,499 ஆக உயர்ந்துள்ளது.

