‘எட்டோமிடேட்’ வகை போதைப்பொருள் தொடர்பான போக்குவரத்து குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட முதல் வாகன ஓட்டுநருக்கு, செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 31) ஐந்து ஆண்டுகள், 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் 10 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
மேலும், அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது.
27 வயது துங் ஜுன் யூ, போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பயன்படுத்தி போதையில் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட் லேனில் போக்குவரத்துத் திசைக்கு எதிராக காரை ஓட்டிச் சென்றார். அங்கு மற்றொரு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.
போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை சிங்கப்பூரரான துங் ஒப்புக்கொண்டார்.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி மாலை 5.40 மணி முதல் 6.30 மணி வரை, உச்சநீதிமன்றத்துக்கும் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்துக்கும் இடைப்பட்ட சாலையில் துங் போக்குவரத்துக்கு எதிர் திசையில் வாகனம் ஓட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதிக போக்குவரத்து நெரிசல் இருந்த நேரத்தில், வலதுபுறம் மட்டுமே திரும்ப வேண்டிய பாதையில் நேராகச் சென்ற அவர், பிராஸ் பசா சாலையில் மற்றொரு கார் மீது மோதினார்.
காவல்துறை அதிகாரிகள் துங்கைப் பிடித்தபோது, அவர் குழப்பத்துடன் பேசுவதையும் கண்கள் சொருகி இருப்பதையும் கேள்விகளுக்கு மிகவும் தாமதமாகப் பதிலளிப்பதையும் கவனித்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அவரால் தெளிவான விளக்கம் அளிக்க முடியவில்லை.
மதுபோதைக்கான சோதனையில் அவருக்குப் பாதிப்பு இல்லை என்று தெரிந்தபோதிலும், சுகாதார அறிவியல் ஆணையம் நடத்திய ரத்தப் பரிசோதனையில் அவரது ரத்தத்தில் எட்டோமிடேட் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

