தேர்தல் செலவுக் கணக்கு: ஒரு வேட்பாளர் $100,000க்கு மேல்; எழுவர் ஒரு காசுகூட செலவழிக்கவில்லை

தேர்தல் செலவுக் கணக்கு: ஒரு வேட்பாளர் $100,000க்கு மேல்; எழுவர் ஒரு காசுகூட செலவழிக்கவில்லை

2 mins read
eb1d6a3b-46f6-481c-b99e-f1aed72bfdb5
இன்னும் 176 வேட்பாளர்களின் செலவு விவரங்கள் வெளியாகவில்லை. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இம்மாதத் தொடக்கத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 35 பேர் தங்களது செலவுக் கணக்கை தேர்தல் துறையிடம் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்கள் அத்தனை பேரும் செலவு செய்த தொகை $884,978.

வேட்பாளர்களின் செலவு விவரங்கள் புதன்கிழமை (மே 28) முதல் தேர்தல் துறையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் தொகையின் அடிப்படையில் சராசரியாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஆன செலவு $25,285 ஆகும்.

மொத்தம் 211 வேட்பாளர்களில் 176 வேட்பாளர்களின் செலவுக் கணக்கு இன்னும் வெளியாகவில்லை.

செலவுகளைச் சமர்ப்பித்தோர் பட்டியலில் எதிர்த்தரப்பு பாட்டாளிக் கட்சியின் வேட்பாளர்கள் யாரும் இல்லை.

செலவுக் கணக்கை சமர்ப்பித்துள்ள 35 வேட்பாளர்கள் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, சீர்திருத்தத்திற்கான மக்கள் கூட்டணி, ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சி, சிங்கப்பூர் மக்கள் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் மக்கள் செயல் கட்சி வேட்பாளர்களின் சராசரி செலவுத் தொகை $77,751.

ஒரு வேட்பாளர் மட்டும் $104,085 செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த கோ பெய் மிங் என்னும் வேட்பாளர்தான் அவர். அவரது மொத்த செலவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை இணையவழி அல்லாத தேர்தல் விளம்பரத்திற்குச் செலவிடப்பட்டவை.

போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்ட மரின் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி மசெக வேட்பாளர் அவர். அவரது குழு இந்தத் தேர்தலில் மொத்தம் $388,756 செலவழித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவரை கணக்கைச் சமர்ப்பித்தவர்களில் ஏழு வேட்பாளர்கள் தேர்தலுக்காக எந்த செலவும் செய்யவில்லை என்று அறிவித்துள்ளனர்.

ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளி கட்சியைச் சேர்ந்த சரத் குமார், டேவிட் ஃபூ, பாங் ஹெங் சுவான், சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அலெக் டோக், சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் ஹர்மிந்தர் பால் சிங், சிங்கப்பூர் மக்கள் கட்சியைச் சேர்ந்த லிம் ருயி ஸியான், முஹம்மது நோராகிம் ஆகியோர் செலவு செய்யவில்லை என அறிவித்திருக்கும் வேட்பாளர்கள்.

செலவு மட்டுமின்றி தங்களுக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும் வேட்பாளர்கள் அறிவிப்பது அவசியம்.

தேர்தல் பிரசார நிதியில் ஒளிவுமறைவற்ற தன்மையையும் வேட்பாளர்களின் பொறுப்புணர்வையும் உறுதிசெய்ய வேட்பாளர்கள் தாங்கள் செலவழித்த விவரங்களை சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அரசிதழில் வெளியிடப்பட்ட 31 நாள்களுக்குள் அவர்கள் அதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள் மே 16ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டன.

ஜூன் 16க்குள் வேட்பாளர்கள் தங்களது பிரசாரச் செலவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்