அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டும் மீன் பிடிக்கவும்: கவனிப்பாளர்கள்

அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டும் மீன் பிடிக்கவும்: கவனிப்பாளர்கள்

2 mins read
8eecef97-f584-4767-98d0-9295b511197d
மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் உள்ள தகவல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கவனிப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்குக் கவனிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து மீன் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் அவர்கள் நினைவூட்டினர். மீன் பிடிக்க அனுமதி உள்ள இடங்களில் பாதுகாப்பான கட்டமைப்பு, அலைகளைத் தடுக்கும் தடுப்புகள் போன்றவை இருக்கும். இதனால் மீன் பிடிப்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.

ஆறுகள் அமைதியான தோற்றத்தைக் கொடுத்தாலும் அவற்றில் எப்போது வேண்டுமானாலும் சீற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, மழை பெய்யும் போதும் அல்லது மழை பெய்த பிறகும் ஆற்றுப் பகுதிகளைப் பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

கடந்த மாதம் 25ஆம் தேதி காலாங் ஆற்றில் நண்பர்களுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் விழுந்த 13 வயது சிறுவனின் உடல் 26ஆம் தேதி மீட்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே சிறுவன் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறுவன் மீன் பிடித்த இடம் அப்பர் பூன் கெங் ரோடு அருகில் உள்ள இடமாகும். அங்கு மீன் பிடிக்க அனுமதி இல்லை என்று தேசிய தண்ணீர் கட்டுப்பாட்டு அமைப்பான பியூபி கூறியது.

ஆறுக்கும் பூங்காவுக்கும் இடையிலிருக்கும் இணைப்புப் பாதையைப் பிரிக்கும் சுவர் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில், மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகை உள்ளது. மேலும் பொதுமக்கள் அங்கு செல்வதைத் தடுக்க, தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன என்று பியூபியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

“சிங்கப்பூரில் உள்ள வடிகால்களும் கால்வாய்களும் நீர்த்தேக்கங்களுக்கும் கடலுக்கும் நீரைக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

“பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்கள் அவற்றில் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. புயல், மழை காலங்களில் கடுமையான நீரோட்டம் இருக்கும் என்பதால் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளன,” என்றார் அந்தப் பேச்சாளர்.

குறிப்புச் சொற்கள்