தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதி நலத்திற்குக் கைகொடுக்கும் உடற்பயிற்சி அணுகுமுறை

2 mins read
f2a65bbb-573c-4327-b0c6-b694c0164cef
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா சிறப்புரையாற்றினார். - படம்: கீர்த்திகா ரவீந்திரன்

கம்போங் கிளாம் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவராக வீவக வீடுகள், கூட்டுரிமை வீடுகளில் வசிக்கும் பல குடியிருப்பாளர்களை நாள்தோறும் சந்தித்து வருகிறார் சுபாஷ் கோபாலகிருஷ்ணன், 49.

குறிப்பாக, அவர்களில் அதிக மூத்த குடியிருப்பாளர்கள் அடங்குவர்.

இரு மகன்களுக்குத் தந்தையான திரு சுபாஷ், அவர்களுக்கு நிதி நிர்வாகம் குறித்துக் கற்றுத் தருவது தமக்கு ஒரு முக்கியப் பொறுப்பாக இருக்கிறது என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“குடியிருப்பாளர்கள் தங்கள் நிதி நிலைமை, நிதி நிர்வாகம் பற்றிப் பேசுவதற்கு சற்று அச்சப்படுகிறார்கள்,” என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், வரவுசெலவு, சேமிப்பு போன்ற நிதி நிர்வாகப் பழக்கவழக்கங்கள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்குத் தயங்காது முன்வர வேண்டும் என்று திரு சுபாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நிதியைச் சிறப்பான முறையில் நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால், வாழ்வில் பல பொறுப்புகளைச் சீராக, சிக்கலின்றி முடிக்கலாம்,” என்றார் அவர்.

மூத்த குடிமக்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் நிதி நிர்வாகம் பற்றி எடுத்துரைக்க சனிக்கிழமை (செப்டம்பர் 27) இடம்பெற்ற அதுதொடர்பான ‘உடற்பயிற்சி’ நிகழ்வில் திரு சுபாஷ் கலந்துகொண்டார்.

மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம், யுஓபி வங்கியின் இணைந்த ஏற்பாட்டில் யுனைடெட் ஸ்குவேர் வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்வு பலதரப்பட்ட மக்களை ஈர்த்தது.

திட்டமிடல், சேமித்தல், முதலீடு, காப்பீடு என்ற நான்கு பிரிவுகளில் பொதுமக்கள் உடற்பயிற்சி அணுகுமுறைகளைப் பயன்படுத்தி நிதியை நிர்வகிப்பது பற்றி மேலும் அறிந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய சிங்கப்பூர் வட்டார மேயர் டெனிஸ் புவா அந்நான்கு பிரிவு நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக வலியுறுத்திய அவர், குறிப்பாக மூத்தோருக்கான அடுத்தடுத்த முயற்சிகளைப் பற்றித் தமிழ் முரசிடம் கூறினார்.

“மூத்த குடிமக்களுக்கான நிதிக் கல்வியறிவு பற்றிய பயிலரங்குகள், சிறு உரையாடல்களை அடுத்த ஆண்டு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் திருவாட்டி டெனிஸ் புவா.

நிதி நிர்வாகம் சார்ந்த முயற்சிகளில் அடுத்த அடியை எடுத்துவைக்க மேலும் பல குடியிருப்பாளர்களை இந்த முயற்சிகள் ஊக்குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நிதிநலத்தை உறுதிப்படுத்துவது ஒரு பயணம் என்று தெரிவித்தார் யுஓபி வங்கியின் உத்திபூர்வத் தொடர்பு, வர்த்தக அடையாளப் பிரிவின் தலைவர் ஜேனட் யங்.

“உடல்நலத்திற்கு நல்ல பழக்கங்களும் பயிற்சிகளும் எப்படித் தேவையோ அதுபோல நிதி நிர்வாகத்திற்கும் சரியான, உகந்த வழிமுறைகளைக் கையாள்வது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்