தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதியோர் அதிகமுள்ள வட்டாரங்களில் துடிப்புடன் மூப்படைதலுக்கான மேம்பாட்டுத் திட்டம்

2 mins read
450b26fb-3dfe-404a-890b-00efe2a2d343
ஓவியர் கற்பனையில் மூத்தோர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அமையவுள்ள சிகிச்சைமுறைத் தோட்டம். - படம்: ஏ டி லேப் பிரைவேட் லிமிடெட்
multi-img1 of 2

மூப்படையும் பயணத்தை மேலும் சுமுகமாக்கும் நோக்கில் 2029ஆம் ஆண்டுக்குள் தோட்டங்கள், உடலுறுதித் தடங்கள் போன்ற மேம்பாடுகளை சிங்கப்பூரின் 26 வட்டாரங்கள் பெறவுள்ளன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் புதிய மூத்தோர் மேம்பாட்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் இதன்மூலம் சுமார் 24,000 மூத்த குடிமக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்திற்குத் தகுதிபெறாத நிலையில், மூத்தோர் அதிகம் உள்ள வட்டாரங்களில் இத்தகைய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் இக்குறிப்பிட்ட திட்டம் கவனம் செலுத்தும் என்று ஆகஸ்ட் 25ஆம் தேதி தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

அங் மோ கியோவில் நடந்த சமூக மேம்பாட்டு நடை நிகழ்வு ஒன்றில் பேசிய திரு லீ, துடிப்புடன் மூப்படைதலுக்கான வசதிகள் குறித்து விளக்கினார். சிகிச்சைமுறை தோட்டங்கள், உடலுறுதித் தடங்கள், தடங்கலற்ற நடமாட்டச் சரிவுப்பாதைகள், இணைப்புப்பாதைகள் நெடுகே அமைந்த ஓய்விடங்கள் போன்றவற்றை முதியவர்கள் எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டம் 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்கீழ் வீடுகள் மேம்படுத்தப்படுவதுடன் வட்டாரங்களில் உடலுறுதிப் பகுதிகள், கூரையுடன் கூடிய இணைப்புப்பாதைகள் போன்ற வசதிகளும் செய்து தரப்படும்.

சற்று பழைய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வட்டாரங்கள் சிலவற்றில், ஏற்கெனவே வட்டார மேம்பாட்டுத் திட்டங்கள் முன்பு மேற்கொள்ளப்பட்டதால் அவை அக்கம்பக்கப் புதுப்பிப்புத் திட்டத்திற்குத் தகுதிபெறாது என்று திரு லீ விளக்கினார்.

“ஆனால், இந்த வட்டாரங்கள் சிலவற்றில் முதியவர்கள் பலர் இருப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். மூத்தோருக்கு ஏதுவான மேம்பாடுகள் செய்யப்படுவதன் மூலம் இவர்கள் அவற்றின்வழி பலனடைவார்கள்,” என்று குறிப்பிட்டார் அவர்.

அதனால், புதிய திட்டத்தின்கீழ் மூத்தோர் மேம்பாட்டுத் திட்டப் பணிகள் இந்தக் குறிப்பிட்ட சில வட்டாரங்களில் நடக்கும் என்றார் அமைச்சர் லீ.

மூத்தோர் மேம்பாட்டுத் திட்டம் உட்பட ‘நலமாக மூப்படைதல்’ எஸ்ஜி செயல்திட்டம் (Age Well SG) தொடர்பாக தேசிய வளர்ச்சி அமைச்சு மொத்தம் $600 மில்லியன் செலவிடும். முதியவர்கள் பிறரைச் சார்ந்திடாமல் தங்களின் சமூகங்களில் துடிப்புடன் மூப்படைவதற்கு இந்த மூத்தோர் மேம்பாட்டுத் திட்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்க நிதியுடன் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள், 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நான்கு சோங் பூன் வட்டாரங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அங் மோ கியோ, புக்கிட் மேரா, குவீன்ஸ்டவுன், தோ பாயோ ஆகியவற்றில் உள்ள சற்று பழைய 22 வட்டாரங்களில் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதற்கான பணிகள் 2029ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று மதிப்பிடப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்