மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு கடந்த பிப்ரவரி 25, 26ஆம் தேதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சிங்கப்பூரர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்; ஒரு ஃபெராரி கார் உட்பட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களில் நால்வர் ஆண்கள், ஒருவர் பெண் என்று திங்கட்கிழமை (மார்ச் 2) வெளியிட்ட அறிக்கையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது. ஐவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து 1,284 மின்சிகரெட்டுகளும் எட்டோமிடேட் போதைப்பொருள் கலந்திருப்பதாக நம்பப்படும் ஒன்பது மின்சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிப்ரவரி 25ஆம் தேதி, பிடோக் நார்த் பகுதிக்கு அருகே 36 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து எட்டோமிடேட் கலந்திருப்பதாகக் கருதப்படும் 50 மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே நாளின் பின்னேரத்தில் செம்பவாங் ரோடு-மண்டாய் அவென்யூ சந்திப்பில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் 1,084 மின்சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஈசூன் வட்டார வீட்டில் சோதனையிட்ட அதிகாரிகள் 37 வயது ஆடவரையும் 29 வயதுப் பெண்ணையும் கைது செய்தனர். அந்த வீட்டில் மின்சிகரெட்டுகள், $243,451.35 ரொக்கம், சிறிதளவு வெளிநாட்டுப் பணம், ஆடம்பரக் கைக்கடிகாரங்கள் பிடிபட்டன.
பிப்ரவரி 26ஆம் தேதி காலை, உட்லண்ட்ஸ் டிரைவில் உள்ள வீட்டில் 19 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். எட்டோமிடேட் போதைப்பொருள் கலந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மின்சிகரெட்டுகளும் அவை சார்ந்த பொருள்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.
விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டது.

