சிங்கப்பூரில் ஜூலை 1ஆம் தேதி முதல் பாதசாரிகளுக்கான பாதையில், சைக்கிள் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், விதிமுறை அமலுக்கு வந்தது முதல் இதுவரை ஐவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துணை அமைச்சர் பே யாம் கெங் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியபோது அந்தத் தகவலை அமைச்சர் பே வெளியிட்டார்.
நில போக்குவரத்து ஆணையத்தின் புதிய விதிமுறைப்படி பாதசாரிகளுக்கு மட்டுமான பாதையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்று மாதங்கள் வரையிலான சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
“அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபடுகிறார்கள், மேலும் பொதுமக்கள் தரும் கருத்துகளை வைத்து முக்கியமான இடங்களில் அதிகச் சோதனைகள் நடத்தப்படுகின்றன,” என்று அமைச்சர் பே தெரிவித்தார்.
விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், பின்னர்தான் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அமலாக்க அதிகாரிகள் தங்களால் முடிந்த அளவுச் சோதனைகளைச் செய்கின்றனர், அதேபோல் தவறுகளைத் தடுக்கத் தவறுவதில்லை. சில முறை மெதுவாகச் செல்லும் சைக்கிள்களைக் கடந்து செல்லச் சைக்கிளோட்டிகள் தடம் மாறுகிறார்கள். அதைக் குற்றம் என மதிப்பிடமுடியாது,” என்று அமைச்சர் பே சொன்னார்.
“ சைக்கிளோட்டிகள் வேண்டுமென்றே பாதசாரிகளுக்கான பாதையில் சைக்கிள் ஓட்டி, மற்றவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொள்ளாமல் நடந்து கொண்டால் கட்டாயம் தண்டனை விதிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாதைகளில் தெளிவாகக் குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன, அதை எளிதாகப் பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் அடையாளம் காணமுடியும் என்பதையும் திரு பே நினைவூட்டினார்.
சைக்கிளோட்டிகளுக்கு ஒட்டுநர் உரிமம் வழங்குதைவிட அவர்களுக்கு விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு தருவதுதான் சிறந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகள், சமூகக் குழுக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெறும் என்று அமைச்சர் பே கூறினார்.