மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரிப்பு

2 mins read
b4513b3d-af19-4af9-9dcd-3b860ea39edf
குடும்ப ‘ஹைப்பர்கொலெஸ்டிரோலீமியா’ என்ற மரபணுக் கோளாறு உள்ள குழந்தைகளுக்கு, தோல் புடைப்புகள் அல்லது முழங்கையில் கட்டிகள் போன்ற கண்களுக்குப் புலப்படும் அறிகுறிகள் இருக்கலாம். - படங்கள்: கேகே மகளிர், சிறார் மருத்துவமனை

கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையில் (கேகேஎச்), 2025ஆம் ஆண்டில் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதய நோய்கள் அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் ஒரு மரபணு நோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.

மே 2024ல், இந்த நிலையை நிர்வகிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட குழந்தைகள் ‘லிப்பிட்’ நிலையத்தை ‘கேகேஎச்’ திறந்த பிறகு, மருத்துவமனையில் குடும்ப ஹைப்பர்கொலெஸ்டிரோலீமியா (எஃப்எச்) என்ற மரபணுக் கோளாறு தொடர்பான புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதற்கு முன்பு, 2009 முதல் ‘கேகேஎச்’ ஆண்டுக்கு ஐந்து புதிய ‘எஃப்எச்’ சம்பவங்களுக்கு சிகிச்சை அளித்தது. மே முதல் டிசம்பர் 2024 வரை, 10 புதிய சம்பவங்கள் பதிவாகின.

2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 25 புதிய சம்பவங்களாக அதிகரித்ததாக கேகேஎச்சின் உட்சுரப்பியல் சேவையின் தலைவரும் மூத்த மருத்துவ ஆலோசகருமான பேராசிரியர் ஃபேபியன் யாப் கூறினார்.

‘எஃப்எச்’ என்பது மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடலின் கொழுப்பைச் செயலாக்கும் திறனைப் பாதிக்கிறது. இதற்குச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 மடங்கு அதிகம் என்றும் 20 வயதுகளின் முற்பகுதியில் மார்பு வலி ஏற்படத் தொடங்கலாம் என்றும் பேராசிரியர் யாப் தெரிவித்தார்.

30 வயதுகளின் முற்பகுதியில் முதல் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு ஆண்களுக்கு இருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

‘எஃப்எச்’ இங்கு 4,000 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் உட்பட 35,000க்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.

ஆயினும்கூட, 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கண்டறியப்படாமல் உள்ளனர் அல்லது சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதில்லை. இவர்கள் குறிப்பாக, இளைய வயதினர் என்று ‘கேகேஎச்’ தெரிவித்தது.

புதிய நிலையத்தை அமைப்பதன் மூலம், ‘எஃப்எச்’ ஆபத்தில் உள்ள குழந்தைகளை முன்கூட்டியே பரிசோதிப்பதையும், அடையாளம் காணப்பட்டவுடன் நிலைமையை முன்கூட்டியே நிர்வகிப்பதையும் ‘கேகேஎச்’ நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘எஃப்எச்’ என்பது ஒரு பரம்பரை நோய் என்பதால், பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், குழந்தையின் நோயறிதலும் முக்கியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்