புதிய அமைச்சரவையின் ஐந்து முக்கிய அம்சங்கள்

புதிய அமைச்சரவையின் ஐந்து முக்கிய அம்சங்கள்

3 mins read
dac85bbb-5758-4258-a86c-eece33e3b2b6
பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 21) செய்தியாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவையை அறிவித்தார். - படம்: சாவ் பாவ்

பிரதமர் லாரன்ஸ் வோங், 2025 பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதன்கிழமை (மே 21) தமது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் மூன்று புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர்களை அவர் நியமிக்கவுள்ளார். புதிய அமைச்சரவையின் மையப்பகுதியாக அவர்கள் அமைவார்கள்.

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சராக திரு கா.சண்முகம், பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக திரு சான் சுன் சிங், சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக திரு ஓங் யி காங் ஆகியோர் அந்த மூவர்.

அமைச்சரவை மாற்றங்களுடன், அனைத்து அமைச்சுகளிலும் அரசுப் பதவி வகிக்கும் புதியோர் இருப்பார்கள் என்பதைப் பிரதமர் வோங் சுட்டினார்.

புதிய அமைச்சரவையின் ஐந்து முக்கிய அம்சங்கள் இவை:

1. ஒவ்வோர் அமைச்சிலும் புதிதாக அரசுப் பதவி வகிப்போர் இருப்பார்கள்

புதிய அமைச்சரவையின்கீழ், ஒவ்வோர் அமைச்சிலும் மாற்றங்கள் இருக்கும் எனப் பிரதமர் வோங் அறிவித்தார். அரசுப் பதவி வகிப்போருக்குப் பரவலான அனுபவமும் கற்றுக்கொள்ள வாய்ப்புகளும் வழங்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைகிறது.

பதினைந்தில் ஆறு அமைச்சுகளுக்குப் புதிய அமைச்சர்கள் தலைமை தாங்குவார்கள்.

2. மூன்று புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர்கள்

திரு சண்முகம், திரு சான், திரு ஓங் ஆகியோரை மூன்று புதிய ஒருங்கிணைப்பு அமைச்சர்களாக பிரதமர் வோங் நியமிக்கவுள்ளார்.

துணைப் பிரதமர் கானுடன் சேர்ந்து, பிரதமர் வோங்கிற்கு உதவி, அறிவுரை வழங்கும் மையக் குழுவில் இந்த மூத்த தலைவர்கள் இடம்பெறுவர். அதோடு புதிய, இளம் அமைச்சர்களுக்கு வழிகாட்டுதலும் மதியுரையும் இவர்கள் வழங்குவர்.

பிரதமர் வோங் இல்லாதபோது தற்காலிகப் பிரதமராக துணைப் பிரதமர் கான் இருப்பார்.

எனினும், பிரதமர் வோங்கும் துணைப் பிரதமர் கானும் இல்லாவிட்டால், மூன்று ஒருங்கிணைப்பு அமைச்சர்களில் ஒருவர் தற்காலிகப் பிரதமர் பொறுப்பை ஏற்பர்.

3. புதுமுகங்களுக்குக் கூடுதல் பொறுப்பு

புதிய அமைச்சரவையில் பல்வேறு புதுமுகங்கள் கூடுதல் பொறுப்பை ஏற்கவுள்ளனர்.

தங்களது தற்காலிக அமைச்சர் பொறுப்புகளுக்கும் மேலாக, திரு ஜெஃப்ரி சியாவ் நிதி மூத்த துணை அமைச்சராகவும் திரு டேவிட் நியோ கல்வி மூத்த துணை அமைச்சராகவும் பதவி வகிப்பார்கள்.

முன்னாள் பிரிகேடியர்-ஜெனரல் கோ பெய் மிங் சமுதாய, குடும்ப மேம்பாட்டு; உள்துறை துணை அமைச்சராக நியமிக்கப்படுவார்.

ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தலைமை நிர்வாகியாக இருந்த திரு தினேஷ் வாசு தாஸ் கலாசார, சமூக இளையர்துறை; மனிதவள துணை அமைச்சராக நியமிக்கப்படுவார். தென்கிழக்கு வட்டார மேயராகவும் அவர் சேவையாற்றுவார்.

4. அமைச்சரவையில் தொழிற்சங்கத் தலைவர் இல்லாதது ‘தற்காலிக ஏற்பாடே’

புதிய அமைச்சரவையின் ஓர் அங்கமாக தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங் இருக்கமாட்டார். தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) பொறுப்புகளிலும் ஜாலான் காயுவில் தமது தொகுதிப் பணியிலும் கவனம் செலுத்த விரும்புவதாக அவர் கேட்டுக்கொண்டதாக பிரதமர் வோங் கூறினார்.

திரு இங்கின் முடிவை தாம் மதிப்பதாகச் சொன்ன பிரதமர் வோங், இது ஒரு தற்காலிக ஏற்பாடே என வர்ணித்தார்.

“நீண்ட நாளாவதற்குள் அமைச்சரவையின் ஒரு பகுதியாக தொழிற்சங்கத் தலைவர் இருப்பதை நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார் பிரதமர் வோங்.

5. முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் புதிய தற்காலிக அமைச்சர்

இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராகிம், மூத்த துணை அமைச்சராகப் பதவி உயர்வு பெறவுள்ளார். அதோடு, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராகவும் அவர் நியமிக்கப்படவுள்ளார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியிடமிருந்து முஸ்லிம் விவகாரங்களுக்கான பொறுப்பைப் பேராசிரியர் ஃபைஷால் ஏற்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்