போலி நண்பர் மோசடி அழைப்புகளைப் புரிந்துவரும் பன்னாட்டுக் கும்பலால் பணி அமர்த்தப்பட்ட மலேசிய ஆடவர்கள் ஐவருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.
ஜோகூர் பாருவில் உள்ள ஒரு மோசடி மையத்தில் இருந்து செயல்படும் அவர்கள், சிங்கப்பூரிலுள்ள குறைந்தது 70 பேர் மீது குறிவைத்தனர். இதனால் அவர்கள் 164,000 வெள்ளிக்கும் அதிகமாக இழந்தனர்.
68 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்ட முதியவர்கள் பலர், இந்தக் கும்பலின் மோசடிக்கு ஆளாகினர்.
பாதிக்கப்பட்டோரைக் குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் மோசடிக்காரர்கள் அணுகினர். அவர்களுக்குத் தெரிந்தவர்களைப் போல பாசாங்கு செய்த மோசடிக்காரர்கள், உதவி கேட்பதன் பேரில் பணம் பறித்தனர்.
2023 மே மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் இந்த ஐவர், மோசடிக் கும்பலில் இணைந்து செயலாற்றத் தொடங்கினர். அவர்களில் சிலர், ஒரே நபரை ஏமாற்றுவதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டனர்.
குற்றவாளிகளில் ஒருவரான 24 வயது சுவா ஸீ ஹுவாங்கிற்கு நான்கு ஆண்டு ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்தச் சம்பவம் தொடர்பில் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஆக அதிகம்.
ஜோகூர் பாருவிலுள்ள ‘மரினா ரெசிடன்ஸ் ஜேபி’ கூட்டுரிமை வீடுகளில் தங்கி வந்த அந்த ஐவரும், அங்கிருந்து மோசடி மையத்தை இயக்கி வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த வேலைக்காக அவர்களுக்கு மாதத்திற்கு 5,000 ரிங்கிட் வரையிலான சம்பளமும் தரப்பட்டிருந்தது. அத்துடன், மோசடி செய்து பெறப்படும் தொகையில் 10 விழுக்காடு பங்குத் தொகை அவர்களைச் சேரும்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி, ‘மரினா ரெசிடன்ஸ் ஜேபி’ கூட்டுரிமை வீடுகளில் சோதனை செய்த மலேசிய அதிகாரிகள், அந்த ஐவரையும் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தின் தொடர்பில் சிங்கப்பூர்க் காவல்துறையும் மலேசிய காவல்துறையும் இணைந்து செயலாற்றி தகவல்களைப் பகிர்ந்தனர்.
ஒரு வாரம் கழித்து சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்ட அந்த ஆடவர்கள்மீது, அதே மாதத்தில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.