சிங்கப்பூரில் தேர்தல் களம் சூடுபிடிக்கும் வகையில் ஐந்து அரசியல் கட்சிகள் இன்று (ஏப்ரல் 24) பிரசாரக் கூட்டங்களை நடத்துகின்றன.
காவல்துறை அனுமதித்த இடங்களில் இந்தப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் சக்திக் கட்சி (பிபிபி), சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (பிஎஸ்பி), மக்கள் செயல் கட்சி (பிஏபி), பாட்டாளிக் கட்சி (டபிள்யூபி), சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (எஸ்டிபி) ஆகியன ஏப்ரல் 24ஆம் தேதி இரவு 7.00 முதல் 10 மணி வரை பிரசாரக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்தது.
தெம்பனிஸ் குழுத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் சக்திக் கட்சி, தெமாசெக் தொடக்கக் கல்லூரியிலும் மேரிமவுண்ட் தனித் தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, கேத்தலிக் ஹை பள்ளியிலும் மார்சிலிங்- இயூ டீ குழுத்தொகுதியில் போட்டியிடும் மக்கள் செயல் கட்சி, உட்லண்ட்ஸ் அரங்கத்திலும் செங்காங் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி, த வேல்ஸ் கூட்டுரிமை வீட்டுக்கு அடுத்துள்ள ஆங்கர்வேல் கிரசெண்ட் வழியாக உள்ள திறந்தவெளியிலும் மார்சிலிங்-இயூ டீ தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சூவா சூ காங் அரங்கத்திலும் பிராசாரக் கூட்டங்களை நடத்துகின்றன.
பிரசாரக் கூட்டம் நடைபெறும் இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதில் பங்கேற்பவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சாலைத் தடங்களில் சில மூடப்படுவது, போக்குவரத்தை திசை திருப்பி விடுவது, மெதுவடைந்த போக்குவரத்து ஆகியவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அது கூறியது.
பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள கார்ப்பேட்டைகளுக்கான மாதாந்தர வாகனம் நிறுத்தும் அனுமதி வைத்திருப்பவர்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு வரம்புகள் இருக்கும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டால் அந்த வாகனம் இழுத்துச் செல்லப்படும் என்று அது மேலும் எச்சரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து, பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு மேலே மாலை 6.00 முதல் இரவு 11.00 மணி வரை அங்கீகரிக்கப்படாத வானூர்திகள், ஆளில்லா வானூர்திகள் பறப்பதற்குத் தடை விதித்துள்ளது.