தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காலத்திற்கேற்ப மாற கடப்பாடு கொண்டுள்ள தற்காப்பு உடன்பாடு

2 mins read
7ca14805-6083-47c6-a8a5-a961bb488835
சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தலைவர்கள், கான்ரேட் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் வியாழக்கிழமை (மே 29) கலந்துரையாடலில் ஈடுபட்டனர். - படம்: கி. ஜனார்த்தனன்

சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன் என ஐந்து நாடுகளுக்கு இடையிலான தற்காப்பு உடன்பாடு காலத்திற்கு ஏற்ற வகையில் கொண்டுசெல்லப்படும் என்று அந்த ஐந்து நாடுகளைச் சேர்ந்த ராணுவத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கான்ரேட் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் வியாழக்கிழமை (மே 29) நடைபெற்ற ஐந்து நாட்டுத் தற்காப்பு ஏற்பாடுகள் மாநாட்டுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் தங்கள் கருத்துகளைப் பகிர்வதற்கு அந்நிகழ்ச்சி நல்ல வாய்ப்பு தந்ததாக அவர்கள் கூறினர்

சிங்கப்பூரின் தற்காப்புப் படைத் தலைவரான வைஸ் அட்மிரல் ஏரன் பெங் வழிநடத்திய இந்தச் சந்திப்பில், மலேசிய ராணுவத் தலைவர் ஜெனரல் முகம்மது நிஸாம் ஜாஃபர், ஆஸ்திரேலிய ராணுவத் தலைவர் அட்மிரல் டேவிட் ஜான்ஸ்டன், நியூசிலாந்து ராணுவத் தலைவர் மார்ஷல் டோனி டேவிஸ், பிரிட்டிஷ் ராணுவத் தலைவர் அட்மிரல் டோனி ராடகின் ஆகியோர் இடம்பெற்றனர்.

வரையறைக்குட்பட்ட பொறுப்பு, காலத்திற்கேற்ற இயைபு, மறுவுறுதி ஆகிய பண்புகளைப் பின்பற்றியே தங்களது அனைத்துச் செயல்பாடுகளும் இருப்பதாக வைஸ் அட்மிரல் பெங் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாக நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு ஏரன் பெங், பாவனைப் பயிற்சிகள், முழு ராணுவப் பயிற்சிகள், சந்திப்புகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என்றும் சொன்னார்.

“அடுத்ததாக வரவுள்ள முக்கிய வருடாந்தரப் பயிற்சியான ‘பெர்சாமா லிமா’வில் ஆஸ்திரேலியாவின் எஃப் 35, பிரிட்டனின் கேரியர் ஸ்ட்ரைக் குருப் ஆகிய போர் விமானங்கள் உட்பட பல்வேறு கருவிகளை நாங்கள் பயன்படுத்தவுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

54 ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்படுத்தப்பட்ட இந்த உடன்பாடு, வட்டாரப்பாதுகாப்புக் கட்டமைப்பின் அடித்தளமாகத் தொடர்ந்து திகழ்வதாக வைஸ் அட்மிரல் பெங் குறிப்பிட்டார்.

“நமது தொடர்ச்சியான சந்திப்புகளும் பயிற்சிகளும் ராணுவப் படைகளிடையே ஒற்றுமையையும் நம்பிக்கையையும் வளர்க்கின்றன. இந்த இணைப்புகளும் பகிரப்பட்ட அனுபவங்களும் காலத்துடன் பொருந்தக்கூடிய இந்தத் தற்காப்பு உடன்பாட்டின் தன்மையைக் கட்டிக்காக்கும்,” என்று அவர் கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் செயல்பாடுகளை விவரிக்கும் வரைபடத் திட்டம் புதுப்பிக்கப்படுவதாகக் கூறிய வைஸ் அட்மிரல் பெங், போர்த்திறனை மேம்படுத்தும் அதே நேரத்தில் கடல்துறைப் பாதுகாப்பு, மனிதநேய உதவி, பேரிடர் நிர்வாகம், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றின் மீதான கவனத்தை எல்லா நாடுகளும் தொடரவிருப்பதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்