நாடுகடந்த மோசடிக் கும்பலுக்காகச் செயல்பட்டதை மலேசியாவைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்த ஐந்து பேரால் சிங்கப்பூரில் குறைந்தது 70 பேர் பாதிக்கப்பட்டனர்.
மோசடிக்காரர்கள் விரித்த வலையில் சிக்கியவர்களுக்கு $164,000க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது.
தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் தொடர்புகொண்டு நண்பரைப் போல பாசாங்கு செய்து பண உதவி கேட்டு இவர்கள் ஏமாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக 20 வயது கெக் யுவான் சுன், 24 வயது சுவா சி ஹுவாங், 26 வயது ஹெங் குவோ ஹாவ், 36 வயது லோ சுவான் ஷெங், 37 வயது யீ கோங் யாவ் ஆகியோர் பிடிபட்டனர்.
தங்கள் மீது சுமத்தப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுகளை அவர்கள் மார்ச் 14ல் ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் குறிவைத்தவர்களில் 68 வயதுக்கும் 76 வயதுக்கும் இடைப்பட்ட எளிதில் பாதிப்படையக்கூடிய முதியவர்களும் அடங்குவர்.
ஜோகூர் பாருவில் உள்ள மரினா ரெசிடென்ஸ் ஜேஎபி கூட்டுரிமைக் குடியிருப்பில் இந்த ஐவரும் குடிபுகுந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கிருந்து அவர்கள் மோசடிக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடிக் கும்பல், ஒவ்வோர் ஆடவருக்கும் முதல் மூன்று மாதங்களுக்குத் தலா 3,000 ரிங்கிட் (S$900) கொடுத்தது.
பிறகு இத்தொகை 5,000 ரிங்கிட் அல்லது 5,500 ரிங்கிட் ஆக உயர்த்தப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏமாற்றிப் பறிக்கப்பட்ட தொகையிலிருந்து 10 விழுக்காடு தரகுத்தொகை வழங்கப்பட்டது.
ஐந்து பேரின் உணவு மற்றும் வசிப்பிடத்துக்கான செலவுகளை மோசடிக் கும்பல் பார்த்துக்கொண்டது.
ஐந்து ஆடவரும் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தன.

