குழந்தைகளுக்குத் தட்டையான தலை; புதிய சிகிச்சை நிலையத்தைத் தொடங்கிய கேகே மருத்துவமனை

2 mins read
eec26383-4a56-4d14-8df1-164147ccf3f5
பாதிப்புள்ள பிள்ளைகள் முப்பரிமாண முறையில் உருவாக்கப்பட்ட தலைக்கவசத்தை அணிவதன்மூலம் தட்டையான தலையைத் தவிர்க்க முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தட்டையான தலை (Flat-head syndrome) உள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு சிகிச்சையளிக்க கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை புதிய சிகிச்சை நிலையத்தைத் தொடங்கியுள்ளது.

பிள்ளைகள் தூக்கத்தில் இருக்கும்போது அவர்களது தலை ஒரு பக்கம் சார்ந்து செல்லக்கூடும். நீண்ட நேரம் ஒரு பக்கம் மட்டும் தலை இருப்பதால் சில பிள்ளைகளுக்கு அவர்களின் மண்டையோடு வடிவம் மாறக்கூடும்.

இவற்றைத் தடுக்கும் நோக்கில் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனை முப்பரிமாண முறையில் தலைக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் இவற்றை அணிவதன் மூலம் தட்டையான தலையைத் தவிர்க்க முடியும்.

பிள்ளைகள் அந்தத் தலைக்கவசத்தைத் தொடர்ந்து அணிவதால் அவர்களின் தலை சரியான வடிவத்தில் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தங்களது பிள்ளைகளின் தலை சரியான வடிவில் இல்லை என்று கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்கு வரும் பெற்றோர் எண்ணிக்கை 36 விழுக்காடு அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்குத் தட்டையான தலை உள்ளது என்று 800க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின. ஆனால் 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,000க்கு அதிகமானது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்குச் சரியான சிகிச்சை கொடுக்க வேண்டும் எனச் சிறப்பு நிலையம் திறக்கப்பட்டது.

பாதிப்புக்குள்ளான குழந்தைகளைக் கவனிக்கச் சிறப்பு மருத்துவர்களும் குழுவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

“சிகிச்சைக்காக வரும் பிள்ளைகளின் தலை சரியான வடிவில் இருப்பதையும் அது மோசமான நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதிலும் நாங்கள் கவனமாக இருப்போம்,” என்று கே கே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் கவிதா வி. ஜோதிராசன் தெரிவித்தார்.

அவர் இந்தப் புதிய சிகிச்சை நிலையத்தையும் வழி நடத்துகிறார்.

குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களுக்குத் தட்டையான தலை ஏற்படும் அபாயம் உள்ளது. தகுந்த சிகிச்சை கொடுத்தால் பாதிப்பிலிருந்து எளிதாகத் தப்பலாம்.

உலக அளவில் 22 விழுக்காடு குழந்தைகள் பிறந்த ஆறு வாரங்களில் தட்டைத் தலை பாதிப்பால் பாதிக்கப்படுகின்றன. பிறந்த நான்கு மாதங்களில் அந்த எண்ணிக்கை 30 விழுக்காடு வரை அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்