தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீக்குப்போக்கு வேலைநேர ஆசிரியர்களுக்குப் பல்வேறு தெரிவுகள்: கல்வி அமைச்சு

2 mins read
a1f050bb-267d-4304-a491-90408e897f05
பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டி இருந்ததால், நீக்குப்போக்கு வேலைநேரத்தை தமது தெக் வாய் தொடக்கப் பள்ளியிடம் கேட்டுப் பெற்ற ஆசிரியர் சிந்தியா சாங். - படம்: தெக் வாய் தொடக்கப் பள்ளி

சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 3.7 விழுக்காட்டினர் சராசரியாக 2020ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பகுதிநேர வேலை ஏற்பாடுகளில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் பகுதிநேர வேலை மற்றும் இதர நீக்குப்போக்கு வேலைநேரத் திட்டங்களில் இடம்பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து அமைச்சிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் வினவி இருந்தது.

ஆசிரியர் அணிக்கான நீக்குப்போக்கு வேலைநேரத் திட்டம், பள்ளிக்கூடங்களின் குறுகிய கால மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கைகொடுக்கிறது.

அதுபோன்ற ஆசிரியர்கள் குறைந்த நேரமே வேலை செய்வர். முழுநேர ஆசிரியர்களுக்கான இணைப்பாட, நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

நீக்குப்போக்கு ஏற்பாடுகளில் வேலை செய்ய விரும்பும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை அவர்களின் வேலை அட்டவணைக்கு ஏற்ப சரிசெய்வது எவ்வாறு என்பது குறித்து தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார்.

ஆக அண்மைய கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரிகளில் 30,396 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

அவர்களில் நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை விரும்பும் ஆசிரியர்களுக்குப் பல்வேறு தெரிவுகள் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது.

நேரங்கடந்து பள்ளிக்குச் செல்வது, பள்ளியில் நேரடியாகச் செயல்படவேண்டிய அவசியம் இல்லாதபோது வீட்டில் இருந்து வேலை செய்வது, இணையம் வழியாக கூடுகையில் கலந்துகொள்வது, பகுதிநேரமாக வேலை செய்வது போன்றவை அந்தத் தெரிவுகளில் சில.

ஆசிரியர் அணியில் சிறியதொரு பிரிவினரே நீக்குப்போக்கு வேலைநேரம் மற்றும் ஒப்பந்தப் பணியில் இருப்பதாக அமைச்சு கூறியுள்ளது.

நீக்குப்போக்கு ஏற்பாடுகளில் உள்ளோருக்கு அவர்கள் வேலை செய்யும் மணிநேரத்தைக் கணக்கிட்டு, தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

ஆசிரியரின் திறன்கள், அவரின் ஆசிரியப் பணி அனுபவம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்களின் தகுதி நிர்ணயம் செய்யப்படும்.

அண்மைய ஆண்டுகளில் நீக்குப்போக்கு வேலைநேர ஏற்பாடுகளில் உள்ள ஆசிரியர்களின் வேலையில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. அதுபற்றிய கேள்விக்கு அமைச்சு பதிலளிக்கவில்லை.

இருப்பினும், சிறந்த கல்வியாளர்களை ஈர்த்து, தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், எல்லா வகையான ஆசிரியச் சேவைத் திட்டங்களின் சம்பளமும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுவதாக அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்