'வேலையிடத்தில் நாள் முழுவதும் முகக்கவசம் அணிவது சிரமம் என்பதால் அகற்ற அனுமதி'

'வேலையிடத்தில் நாள் முழுவதும் முகக்கவசம் அணிவது சிரமம் என்பதால் அகற்ற அனுமதி'

1 mins read
60ddfb04-9d9e-45ea-917c-51a462cecbd6
-

வேலையிடத்திற்குத் திரும்பும் ஊழியர்கள், அங்கு முகக்கவசத்தை அணிந்தபடியே இருப்பது சிரமமானது என்பதால் முகக்கவசத்தை அகற்ற அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

வேலையிடத்தில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி அகற்றப்படும் போதிலும் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் ஊழியர்கள் கவனமாக இருந்துவர வேண்டும் என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங் கூறினார்.

இந்தப் பணிக்குழு நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 22) நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில், அமெரிக்காவில் இருந்தபடி காணொளி மூலம் பேசிய அமைச்சர், வேலை இடத்தில் முகக்கவசம் இல்லாமல் இருக்கும்போது சக ஊழியர்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாமல் விலகி இருந்து பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்; கூட்டமான இடத்தைத் தவிர்த்துவிடுங்கள் என்று தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) முதல், எஞ்சி இருக்கும் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை அகற்றப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

வேலை இடத்திற்குத் திரும்ப ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்பு அளவு அகற்றப்பட்டு இனி எல்லா ஊழியர்களும் வேலையிடம் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

இருந்தாலும், வேலை இடங்களில் முகக்கவசத்தை அகற்ற இரண்டு நிபந்தனைகள் இருக்கும்.

ஊழியர்கள் சக ஊழியர்களுடன் நேரடியாக அணுக்கத் தொடர்பில் இல்லாதபோது முகக்கவசத்தை அகற்றலாம். வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கும் இடத்தில் அவர்கள் இல்லை எனில் முகக்கவசம் தேவையிராது.