ஜோகன்னஸ்பர்க்: உலகளாவிய அமைப்புகளைச் சீர்திருத்தவும் உலகம் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்கவும் நீக்குப்போக்குள்ள பன்முகத்தன்மை முக்கியம் என்று ஜி20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமையன்று (நவம்பர் 22) தெரிவித்தார்.
எனவே, பழைய அணுகுமுறையைக் கையாள்வதற்குப் பதிலாக பன்முகத்தன்மை உடன்பாடுகள் மூலம் புதிய அணுகுமுறைக்குச் சிறு அமைப்புகள் அடிக்கல் நாட்டலாம் என்றும் பிறகு அதில் மற்றவர்களும் சேர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
பரஸ்பர பலன் அளிக்கும் புதிய பங்காளித்துவங்களை நாடுகள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திரு வோங் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டில் இக்கருத்துகளை அவர் முன்வைத்தார்.
தென்னாப்பிரிக்க வெள்ளையர்கள் அநியாயமான முறையில் நடத்தப்படுவதாகக் கூறி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மாநாட்டைப் புறக்கணித்துள்ளார்.
உலகில் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வளர்ந்துவரும் நாடுகள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது மிகவும் அவசியம் என்று மாநாட்டில் உரையாற்றிய தென்னாப்பிரிக்க அதிபர் சைரில் ராமாஃபோசா வலியுறுத்தினார்.
முன்வைக்கப்படும் பரிந்துரைகள் வழக்கமாக மாநாட்டின் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், இம்முறை அவற்றை மாநாட்டின் தொடக்கத்திலேயே ஏற்றுக்கொள்ள உலகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே, நடப்பில் உள்ள வர்த்தக விதிமுறைகள் மின்னிலக்க வர்த்தகம் போன்ற இன்றைய நடப்புகளுடன் ஏற்புடையதாக இல்லை என்பதை பிரதமர் வோங் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
புதிய உலகளாவிய பொருளியல் கட்டமைப்பை உருவாக்க பேரளவிலான முயற்சி தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான ஆற்றல் ஜி20க்கு இருப்பதாக திரு வோங் கூறினார்.
உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 நாடுகளின் பங்கு 85 விழுக்காடு.
இந்த நோக்கத்தை நிறைவேற்ற, அனைத்து உறுப்பிய நாடுகளுடன் இணைந்து கடமையாற்ற சிங்கப்பூர் தயாராக உள்ளது,” என்று பிரதமர் வோங் கூறினார்.
பன்முகத்தன்மை அணுகுமுறைக்கான முக்கிய அடித்தளங்களுக்கு நாடுகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அனைத்துலகச் சட்டம், நடைமுறைகள், கொள்கைகள் ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் உலகில் அமைதியும் நிலைத்தன்மையும் தொடர இது மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் வோங் கூறினார்.
சிங்கப்பூர் ஜி20 அமைப்பின் உறுப்பிய நாடு அல்ல. இருப்பினும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அது ஜி20 உச்சநிலை மாநாட்டில் விருந்தினராகக் கலந்துகொள்கிறது.
திரு ராமாஃபோசாவின் அழைப்பை ஏற்று ஜி20 மாநாட்டில் பிரதமர் வோங் கலந்துகொண்டார்.
2026ஆம் ஆண்டில் ஜி20-க்கு அமெரிக்கா தலைமை தாங்க இருக்கிறது.
ஆனால், தேவை ஏற்பட்டால் வெறும் சம்பிரதாயத்துக்காகக் காலி நாற்காலியிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க இருப்பதாகத் திரு ராமாஃபோசா தெரிவித்தார்.

