சிங்கப்பூரில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், வெள்ளிக்கிழமையிலிருந்து (ஜனவரி 10) சாங்கி விமான நிலையம், சிலேத்தார் விமான நிலையம் ஆகியவற்றில் தரையிறங்க இருந்த 18 விமானங்கள் அருகில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இரு விமான நிலையங்களையும் சாங்கி விமான நிலையக் குழுமம் நடத்தி வருகிறது.
சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த 12 விமானங்களும் சிலேத்தார் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த ஆறு விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அது கூறியது.
ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் சாங்கியில் ஆக அதிகமாக மழை (255.2 மில்லிமீட்டர்) பதிவானது.
ஜனவரி மாதம், சிங்கப்பூரின் மாதாந்தர சராசரி மழை அளவான 222.4 மில்லிமீட்டரைவிட இது அதிகம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.
மோசமான வானிலை காரணமாக ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் 50 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் தாமதமடைந்ததாக அல்லது புறப்படும் நேரம் மாற்றப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்திருந்தது.
ஜனவரி 10ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் எச்சரிக்கை விடுத்தது.
ஜனவரி 11ஆம் தேதி காலை நியூட்டன் வட்டாரத்தில் வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசாகக் குறைந்தது.