யூனோசில் மின்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அதை ஓட்டிய 37 வயது ஆடவர் வடிகாலில் தலைகுப்புற விழுந்து சிக்கிக்கொண்டார்.
யூனோஸ் ரோடு 8ஐ நோக்கிச் செல்லும் யூனோஸ் அவென்யூ 3ல் ஆடவர் ஓட்டிச்சென்ற மின்சைக்கிள் சறுக்கியதாக நம்பப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 21), ‘எஸ்ஜி ரோட் விஜிலான்டி’ அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இச்சம்பவம் குறித்துப் பதிவிடப்பட்டது.
அந்தப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள படங்களில், மூடப்படாத வடிகாலில் அந்த ஆடவர் குப்புறக் கிடப்பதைக் காணமுடிகிறது.
வடிகாலின் ஒருபக்கத்தில் அவர் கைகள் அழுந்தியிருப்பதையும் அருகில் அவரது தலைக்கவசம் விழுந்து கிடப்பதையும் அந்தப் படங்கள் காட்டுகின்றன.
ஆடவர் அந்த மின்சைக்கிளைச் சட்டவிரோதமாக மாற்றியமைத்ததாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையவாசிகளில் சிலர் இச்சம்பவம் அவருக்கு வலுவான பாடம் கற்பித்திருக்கும் என்று கூறிய வேளையில் சிலர் அவரது உடல்நிலை குறித்துக் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏஷியாஒன் இணையத்தளத்தின் கேள்விக்குப் பதிலளித்த காவல்துறை, இச்சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் நடந்ததாகக் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் பின்னர் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

