லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரியத் தகடுகள்

2 mins read
da8206b0-702c-4eb7-8334-4b8a2a5b912d
லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் சூரியத் தகடுகள் வைப்பதற்கு முன்னர் சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தின் 36 விழுக்காடு பகுதி மிதக்கும் சூரியத் தகடுகளால் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தின் 36 விழுக்காடு என்பது கிட்டத்தட்ட 115 ஹெக்டர் நிலப்பரப்பாகும். அது கரையோரப் பூந்தோட்டத்தின் நிலப்பரப்பை விட அதிகம்.

மிதக்கும் சூரியத் தகடுகள் அமைக்கும் பணி 2026ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும் அது 2029ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றும் சிங்கப்பூர்த் தண்ணீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) தகவல் வெளியிட்டது.

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் வைக்கப்படும் சூரியத் தகடுகளால் குறைந்தது 130 மெகாவாட்-பீக் (megawatt-peak) மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள் சூரியசக்தியினால் மட்டுமே 2 கிகாவாட்-பீக் (gigawatt-peak) உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் வைக்கப்படும் சூரியத் தகடுகளால் மட்டும் 6.5 விழுக்காடு மின்சாரம் கிடைக்கும்.

லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தை தேர்வு செய்வதற்கு முன்னர் பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 384 பக்கங்கள் கொண்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையைச் சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்கள் தயாரித்தனர். நீர்த்தேக்கத்தை நாடிவரும் விலங்குகளைப் பாதிக்கக்கூடாது, கரையோர மண் அரிப்புகள் குறைவாக இருக்க வேண்டும் போன்றவற்றை கருத்தில் கொண்டு சூரியத்தகடுகள் பொருத்தப்படும் இடம் தேர்வு செய்யப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2024ஆம் ஆண்டு மே மாதத்திற்கும் இடையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் 218 விலங்கு வகைகள் அந்தப் பகுதியில் அடையாளம் காணப்பட்டன.

அதில் 19 விலங்கு வகைகள் ஆபத்தில் உள்ள அரிய வகை விலங்கு இனங்கள்.

சூரியத் தகடுகள், கரையிலிருந்து குறைந்தது 70 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்று சுற்றுச்சுழல் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீர்த்தேக்கத்தின் தென்மேற்குப் பகுதியில் மட்டும் 150 மீட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

அதேபோல் பறவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடங்களைத் தவிர்க்குமாறும அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்